

உலக நாடுகளில் 24 நாடுகள் மட்டுமே அங்கீகரித்த ஒரு நாடு இருக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, ஐ.நா. சபை ஆகிய எல்லோருமே இவர்களோடு அரசியல், தூதரகத் தொடர்பு வைத்துக்கொள்ள மறுக்கிறார்கள். அந்த நாடு தைவான் என்று அழைக்கப்படும் சீனக் குடியரசு!
பூகோள அமைப்பு
சீனாவின் தென்கிழக்கில் இருக்கிறது. மொத்தம் 86 தீவுகளைக் கொண்டது தைவான் என்னும் பெரிய தீவு: பெங்கு (Penghu) என்னும் 64 தீவுக்கூட்டம்: 21 சிறிய தீவுகள். சீனா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகியவை அண்டை நாடுகள். நிலப் பரப்பு 35,980 சதுர கிலோமீட்டர்கள். முன்நாட்களில் எரிமலைகளாக இருந்த 3000 மலைச் சிகரங்கள் உள்ளன. தலைநகரம் தைபெய் (Taipei).
சுருக்க வரலாறு
ஆரம்பத்தில் பழங்குடி மக்கள் வசித்தார்கள். அடுத்துச் சீனர்களும், டச்சுக்காரர்களும் புலம் பெயர்ந்து வந்தார்கள். 1544 இல், இந்தத் தீவுகளின் அருகே பயணித்த போர்த்துக்கீசியக் கடற்பயணிகள், நாட்டுக்குப் பர்மோசா (Formosa) என்று பெயர் சூட்டினார்கள். அழகிய தீவு என்று அர்த்தம். 1683 -இல், சீனர்கள் பர்மோசாவைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். 1895 இல் சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே போர் நடந்தது. தோல்வி கண்ட சீனா, பர்மோசாவை ஜப்பானிடம் ஒப்படைத்தது.
1942 -இல், சீனா ஜப்பானிடம் பர்மோசாவைத் திருப்பிக் கேட்டார்கள். இதை ஏற்ற நேச நாடுகள் சீனாவிடம் தந்தார்கள். 1949 இல், சீனாவில் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு பெருகியது. ஆட்சியிலிருந்த சியாங் கை ஷேக் (Chiang Kai-Shek) பர்மோசாவுக்கு ஓடிப்போனார். சீனக் குடியரசு என்று நாட்டுக்குப் பெயர் வைத்தார். தன்னுடையதுதான் ஒரிஜினல் சீனா என்று அறிவித்தார். உலகின் ஏராளமான நாடுகள் அவர் சொல்வதை அங்கீகரித்தன. சியாங் சர்வாதிகார ஆட்சி நடத்தினார். அமெரிக்க ஆதரவில் பொருளாதாரம் அமோகமாக வளர்ந்தது.
1970 இல், ஐ.நா. சபை, பர்மோசாவின் இடத்தைச் சீனாவுக்குத் தந்தது. பர்மோசா அங்கீகாரத்தை இழந்தது. 1975 இல் சியாங் மரணமடைந்தார். ஆட்சிக்கு வந்த அவர் மகன் எதிர்க்கட்சிகள் வளரவும், சீனாவுக்கு மக்கள் பயணிக்கவும் அனுமதித்தார். 1988 இல் மகனும் மரணம், அரசின் இரும்புப் பிடிகள் தளர்ந்தன. 1996 இல், ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடந்தன. 2000 இல், முதன் முறையாகச் சியாங் குடும்பம் நடத்திய கோமிண்டாங் (Kuomintang) கட்சியின் 50 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது.
சீனாவுக்கும், தைவானுக்குமிடையே பகைமை தொடர்கிறது. தைவானை அங்கீகரிக்கும் எந்த நாட்டுடனும், சீனா அரசியல் உறவு வைத்துக்கொள்ளாது. (நாம் தைவானை அங்கீகாரம் செய்யாதது இந்தக் காரணத்தால்தான்.) ஆனால், இந்த நாடுகள் தைவானோடு கலாச்சார, வணிக உறவுகள் வைத்துக்கொள்ளலாம். ஏன், சீனாவே வைத்துக்கொண்டிருக்கிறது. சீனாவின் அயல்நாட்டு வர்த்தகத்தில் முதலிடம் பிடிப்பது அமெரிக்கா, இரண்டாவது ஜப்பான், மூன்றாவது தென் கொரியா. நான்காம் இடத்தில் இருப்பது தைவான்! ஆமாம், பணம் என்று வரும்போது, அரசியல் இரண்டாம் பட்சம்தான்.
மக்கள் தொகை
2 கோடி 34 லட்சம். புத்த மதத்தினர் 93 சதவீதம்: கிறிஸ்தவர்கள் 5 சதவீதம்; எஞ்சிய பிறர் 2 சதவீதம். கல்வியறிவு மிக அதிகம் 98.50 சதவீதம். ஆண்கள் 99.70 சதவீதம். பெண்கள் 97.30 சதவீதம். பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது, மான்டரின் (Mandarin) என்னும் சீன மொழி. இளைய தலைமுறையினர் மட்டுமே ஆங்கிலம் அறிந்தவர்கள்.
ஆட்சிமுறை
நாட்டுத் தலைவர் ஜனாதிபதி. இவரும், உதவி ஜனாதிபதியும், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 20 வயதான ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாக்குரிமை உண்டு. 113 பேர் கொண்ட மக்களவை உறுப்பினர்களும், வாக்காளர்களால் நான்கு வருடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களே. பிரதமரையும், உதவிப் பிரதமரையும் மக்களவை தேர்ந்தெடுக்கிறது.
பொருளாதாரம்
சேவைத் துறை முக்கிய இடம் பிடித்திருக்கிறது - 64 சதவீதம். தொழில் துறையின் பங்கு 34 சதவீதம். எலெக்ட்ரானிக் கருவிகள், தொழில் நுட்பக் கருவிகள் தயாரிப்பு முக்கிய தொழில். பெட்ரோலியம் சுத்திகரிப்பு, ஜவுளி, ரசாயனம், மருந்துகள், இரும்பு உருக்கு, இயந்திரங்கள், சிமெண்ட், உணவுப் பொருட்கள் எனப் பல்வேறு துறைகளில் தைவான் கொடிகட்டிப் பறக்கிறது. இதனால், வேலை வாய்ப்புகள் அதிகம். வேலை இல்லாதோர் வெறும் 4 சதவீதமே. பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு மிகக் குறைவான இரண்டு சதவீதம் மட்டுமே.
நாணயம்
தைவான் டாலர். ஒரு டாலர் சுமார் இரண்டு ரூபாய்.
இந்தியாவோடு வியாபாரம்
சீனாவுக்கும், தைவானுக்கும் இருக்கும் பகைமை காரணமாக, தைவானோடு தூதரகத் தொடர்பு வைத்துக்கொள்ளும் நாடுகளோடு சீனா தன் உறவுகளை முறித்துக்கொள்ளும். இதனால், நாம் தைவானைத் தனி தேசமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், கலாச்சார, வியாபார உறவுகளுக்கு, இந்த அங்கீகாரம் தேவையில்லை என்பது உலக அரசியல் பாரம்பரியம். ஆகவே, தைவானோடு நமக்கு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் தொடர்கிறது.
தைவானுக்கு நம் ஏற்றுமதி ரூ. 13,336 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை இரும்பு, உருக்கு, துத்தநாகம், அலுமினியம், பருத்தி. நம் இறக்குமதி ரூ. 24,633 கோடிகள். பிளாஸ்டிக்ஸ், ரசாயனம், எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை இதில் முக்கியமானவை.
தைவானின் இறக்குமதியில் நம் பங்கு வெறும் ஒரு சதவீதம்தான்; இதேபோல், நம் இறக்குமதியிலும், தைவானின் பங்கு ஒரு சதவீதமே. ஆகவே, இரு தரப்பிலும், கணிசமான வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கின்றன. இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பயணம்
ஜனவரி மார்ச் குளிர்காலம். வெப்பநிலை 50 டிகிரி ஃபாரன்ஹீட் வரை போகும். ஜூன் செப்டம்பர் கோடைக்காலம், வெப்பம் 86 டிகிரி தொடும். அதாவது சென்னைபோல் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், வருடம் முழுக்க மழை பெய்யும். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் பலர் விடுப்பில் போவார்கள். பிசினஸ் பயணத்துக்கு ஏற்ற காலம் ஏப்ரல் செப்டம்பர்.
பிசினஸ் டிப்ஸ்
நீங்கள் சரியான நேரத்துக்குப் போகவேண்டும். அவர்கள் தாமத மாக வந்தாலும் வரலாம். டிராஃபிக் மிக அதிகம். தடைகள், தாமதம் சர்வ சாதாரணம். இதன்படி, மீட்டிங்குகளுக்குப் புறப்படும் நேரத்தைத் திட்டமிடுங்கள். உங்கள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, உயர் அதிகாரிகளோடு பேசுவதையே விரும்புவார்கள். எனவே, கீழ்நிலை அதிகாரிகள் பேச்சு வார்த்தைகளுக்குப் போவது வீண் முயற்சி.
விசிட்டிங் கார்டுகள் அவசியம். உங்கள் பதவியைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும், ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறுபுறம் மான்டரின் சீன மொழியிலும் அச்சிடுவது நல்லது. ஆங்கில அறிவு குறைவாக இருப்பதால், மொழி பெயர்ப்பாளரை உடன் வைத்துக்கொள்ளவேண்டும்,
பேச்சு வார்த்தைகள் நேரம் பிடிக்கும். பழகி, பரஸ்பர நம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் அக்கறையோடு பேசுவார்கள். நேர்மையை எதிர் பார்க்கிறார்கள். “இல்லை” என்று மறுப்பதையும் நாசூக்காகச் செய் வார்கள். உங்களிடமும் அதையே எதிர்பார்ப்பார்கள். அறையில் நுழைந்த வுடன், அங்கிருக்கும் வயதில் மூத்த வர்களுக்கு முதலில் மரியாதை செலுத்த வேண்டும், அவர்கள் அருகில் உட்கார்ந் தால், புகை பிடிக்கவோ, கறுப்புக் கண்ணாடிகள் அணியவோ கூடாது.
விருந்துகள் முக்கிய அம்சம். அவர் கள் இரவு விருந்துகளுக்கு அழைப் பார்கள். நீங்களும் கூப்பிடவேண்டும். மது பரிமாறுவது வழக்கம். அவர்களைப் பார்த்துக் கண் சிமிட்டுதல், தோள்மேல் கை போடுதல், கையை நீட்டிப் பேசுதல், பிறர்மேல் கால் படுதல் ஆகியவை அநாகரீகமாகக் கருதப்படும் உடல் மொழிகள்.
உடைகள்
பிசினஸ் மீட்டிங்குகளுக்கு சூட் அணிந்துவருவதை எதிர்பார்க்கிறார்கள்.
பரிசுகள் தருதல்
பரிசுகள் தருவது அவசியம். அவற்றில் கம்பெனி லோகோ இருக்கலாம். ஆனால், உங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக மட்டுமே இருக்கவேண்டும். நீங்கள் பரிசு கொடுத்தால், வாங்கிக்கொள்ள மூன்று முறை மறுப்பார்கள். தயங்காதீர்கள். இது அவர்கள் பாரம்பரியம். நான்காம் முறை வாங்கிக்கொள்வார்கள்.
slvmoorthy@gmail.com