

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நூடுல்ஸுக்கு அனுமதி வழங்கவில்லை என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது.
டிசம்பர் இறுதியில் பதஞ்சலி நூடுல்ஸ் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று சில தினங்கள் முன்பு பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார்.
ஆனால், இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் தயாரிக்க அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தற்போது உணவுக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை பதஞ்சலி நிறுவனம் கடுமையாக மறுத்துள்ளது.
இது குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஆஷிஷ் பஹுகுணா தெரிவிக்கும் போது, “இன்ஸ்டண்ட் நூடுல்ஸுக்கு முன்கூட்டியே அனுமதி பெறுவது அவசியம். பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் அனுமதி பெறவில்லை.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மற்ற பொருட்களுக்கான அனுமதிகளை பெற்றுள்ளது, ஆனால் இன்ஸ்டண்ட் நூடுல்ஸுக்கான முன் அனுமதி பெறவில்லை. இப்போதைக்கு 10 நிறுவனங்கள் மட்டுமே இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் பிரிவில் அனுமதி பெற்றுள்ளது” என்றார்.
ஆனால் இதனை மறுத்த பதஞ்சலி நிறுவனம், “பாஸ்தா பிரிவின் கீழ் நாங்கள் அவர்களிடமிருந்து அனுமதி பெற்றுள்ளோம். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளின் படி நூடுல்ஸ் பாஸ்தா வகையின் கீழ் வருவதுதான்” என்று கூறியுள்ளது.
மேலும் அந்த நிறுவனம் தெரிவிக்கும் போது, மும்பை உயர் நீதிமன்றத்தின் மேகி நூடுல்ஸ் விவகாரத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்ட பிறகு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தினால் பொருட்கள் தயாரிப்புக்கான அனுமதி நடைமுறைகளைத் தொடர முடியாது என்று அந்த ஆணையமே கூறியுள்ளது என்று பதஞ்சலி வலியுறுத்தியுள்ளது.
பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 70 கிராம் பேக்கின் விலை ரூ.15 என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.