

உங்களுக்கும் இன்னொருவருக்கும் சின்ன பிரச்சினை. பேசி முடிக்கச் சந்திக்கிறீர்கள். பேச்சு ஆரம்பிக்கிறது. திடீரென, காரணம் புரியாமல் இரு தரப்பிலும் வார்த்தைகள் தடிக்கின்றன. பேச்சு விவாதமாகிறது, சண்டையாகிறது. உரசல்கள் விரிசல்களாகின்றன. ஏழு விதமான காரணங்களால், இவை ஏற்படலாம் என்று மனோதத்துவ மேதைகள் சொல்கிறார்கள். அந்தத் தடைக்கற்கள் இவைதாம்:
1. எல்லைத் தடைகள் (Physical Barriers)
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நாம் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருந்தோம். வீட்டில் 10, 15 பேர் வாழும் இடத்தை, தூங்கும் இடத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் குணம் குழந்தைகளுக்கு இயற்கையாக வந்தது. இன்று கூட்டுக் குடும்பங்கள் உடைந்துவிட்டன. குழந்தைகளுக்குத் தனி அறைகள் தருகிறோம். தனி அறையின் கதவு வெறும் கதவு அல்ல, உறவைப் பிரிக்கும் இடைவெளி.
அலுவலகங்களிலும், உயர் அதிகாரிகள் தனி அறைகளில் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு பெரிய ஹாலில் உட்கார்ந்திருப்பார்கள். இருவரும் சமமாகப் பழக முடியாது என்று அறிவிக்கும் நிர்வாகத்தின் மொழி இது. இந்த அடிப்படையில், பேச்சு வார்த்தைகளின்போது, ஒருவரை ஒருவர் நேரடியாகப் பார்க்கும்படியாக இருக்கைகளைப் போடவேண்டும்.
2. கண்ணோட்டத் தடைகள் (Perceptual Barriers)
பழைய எம். ஜி. ஆர் சினிமாக்களை மனதுக்குக் கொண்டு வாருங்கள். ஹீரோ அரும்பு மீசை வைத்திருப்பார், கண்களில் கனிவு இருக்கும். வில்லன் நம்பியாருக்குப் பெரிய மீசை, உருட்டும் விழிகள். நம்பியார் நிஜத்தில் மிக நல்ல மனிதர், கெட்ட பழக்கங்கள் இல்லாதவர். ஆனால், நம்பியாரைப் பார்த்தவுடன் வில்லன் நினைவுதான் நமக்கு வரும். நம்பியார் மாதிரித் தோற்றம் கொண்டவரைப் பேச்சு வார்த்தைகளில் சந்திக்கிறீர்கள். அவர் வில்லனாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தோடுதான் அவரோடு பேசத் தொடங்குவோம். தொடரும் அனுபவங்கள் அவர் நல்லவர் என்று நிரூபிக்கும்வரை இந்தத் தடைகள் தொடரும்.
3. உணர்ச்சித் தடைகள் (Emotional Barriers)
என் நண்பன் நாகராஜனுக்கு இரண்டு முகங்கள் உண்டு. நண்பர்களுக்காக உயிரையே கொடுப்பான். ஆனால், தன் உரிமைகள் பாதிக்கப்படுகிறது என்று நினைத்தால், நட்பு அவனுக்கு இரண்டாம் பட்சம்தான். அவர்களுக்கு எதிராகக் கொடி தூக்கத் தயங்கமாட்டான். உயர் அதிகாரிகளோடு சண்டை போடுவது, சட்ட திட்டங்களை எதிர்ப்பது என அவனுக்குப் போராளி குணம்.
நாகராஜனின் அப்பா நாராயணன் சார் பள்ளிக்கூடத்தில் எங்கள் கணக்கு வாத்தியார். அவன் தவறு செய்வதாக அவர் நினைத்தபோதெல்லாம், அவனுக்குத் தண்டனை கொடுத்தார். பேச்சுவார்த்தைகளின்போது, ஒருவருடைய பழகும் முறையோ, உடல் மொழியோ, நாராயணன் சாரை நினைவுபடுத்தினால், நாகராஜனின் ஆழ்மனதுக்குள் தூங்கும் போராளி விழித்துக்கொள்வான். திடீரென நாகராஜனின் அணுகுமுறை மாறுவது, தன் அப்பாவைப் பற்றிய உணர்வு கலந்த நினைவுகளால், என்பது எதிர்த் தரப்புக்கு எப்படித் தெரியும்?
4. மொழித் தடைகள் (Language Barriers)
பேசுவதற்கு மொழி அத்தியாவசியம். அந்நிய மொழி மட்டுமல்ல, நம் மண்ணிலேயே, நம் தாய்மொழியிலேயே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள எத்தனை சிரமங்கள்?
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசப்படும் ஒரு வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்.
“ லே மக்கா, இப்பம் சோலியா இருக்கேன். பொறவு வா.“
புரியவில்லையா? வார்த்தை வார்த்தையாகப் பார்ப்போம்.
லே - பொருள் கிடையாது. வெறும் விளிச் சொல்
மக்கா - மகனே
இப்பம் - இப்பொழுது
சோலியா - ஜோலியாக / வேலையாக
பொறவு - பிறகு
அதாவது, “ லே மக்கா, இப்பம் சோலியா இருக்கேன். பொறவு வா“ என்றால்,
“ மகனே, இப்பொழுது வேலையாக இருக்கிறேன். பிறகு வா“ என்று அர்த்தம்.
குமரி மாவட்டத்தில் பேசும் வட்டார மொழி மதுரையில், திருச்சியில், சேலத்தில், கோவையில், சென்னையில் புரிவதில்லை.
இந்தியாவில் 452 மொழிகளும் 2000 - க்கும் அதிகமான வட்டார மொழிகளும் இருக்கின்றன. உலக அளவில் 6912 மொழிகள் உள்ளன. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலின் அடிப்படையே மொழிதான். மொழி பெயர்ப்பவர் எத்தனைதான் வல்லுநராக இருந்தாலும், வீரியம் குறையாமல் நம் கருத்துகளை அவர் எடுத்துவைக்க முடியுமா?
5. கலாசாரத் தடைகள் (Cultural Barriers)
தில்லியில் ராக்கேஷ் ஷர்மா காகிதம் தயாரிக்கும் எந்திரங்கள் தயாரிக்கிறார். கம்பெனி பெயர் ஸ்வஸ்திக் இண்டஸ்ட்ரீஸ். ஒரு இஸ்ரேல் நாட்டுக் கம்பெனியின் தொழில் நுட்ப உதவியோடு, நிறுவனத்தை மேம்படுத்த விரும்பினார். அனில் கபூர் என்ற நிர்வாக ஆலோசகரை அணுகினார். அவர் கொடுத்த முதல் அட்வைஸ், “உங்கள் கம்பெனி பெயரை மாற்றுங்கள்.“
அனில் கபூர் சொன்ன காரணம், “ இஸ்ரேல் நாட்டு மக்கள் யூதர்கள். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் லட்சக் கணக்கான யூதர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் சின்னம் ஸ்வஸ்திகா. பெயரிலும், வடிவத்திலும், நம் ஸ்வஸ்திக் அவர்களுக்கு ஸ்வஸ்திக்காவை நினைவூட்டும். இந்த டீல் நடக்காது.“
பாரம்பரிய பிஸினஸ்களில் மட்டுமல்ல, தொழில்நுட்பத் துறைகளிலும் இந்தச் சிக்கல்கள் உண்டு. நம் சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் ப்ராஜெக்ட்கள் தருகிறார்கள். என் அமெரிக்க நண்பர் ராபர்ட் சொன்னார், ”இந்திய கம்பெனிகளோடு பேசும்போது ஒரு முக்கிய பிரச்சனை. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது, இன்னொருவர் குறுக்கிட்டுப் பேசக்கூடாது என்பது எங்கள் பழக்கம். இந்தியர்கள் இதைப் பின்பற்றுவதேயில்லை.”
பிற நாட்டுக்காரர்கள் அல்லது பிற கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடப்போகிறீர்களா? அவர்களின் பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் பற்றித் தெர்ந்துகொள்ளுங்கள். எந்த விதத்திலும் இந்த உணர்வுகள் காயப்படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
6. ஆண் - பெண் குணநலத் தடைகள் (Gender Barriers)
ஆண்களும் பெண்களும் அறிவிலும், திறமையிலும் சரி நிகர் சமமானவர்கள்தாம். ஆனால், அவர்களுடைய மனப்பாங்குகள் அடியோடு மாறுபட்டவை என்று மனோதத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உதாரணமாக,
ஆண்கள் விரும்புபவை, மதிப்பவை - அதிகாரம், பதவி, திறமை, வெற்றிகள்: பெண்கள் விரும்புபவை அன்பு, பழகுதல், அழகு, உறவுகள்.
பிரச்சினைகள் வரும்போது, மன உளைச்சல் ஏற்படும்போது, ஆண்கள் தனிமையை விரும்புகிறார்கள். தாங்களே தீர்வுகள் காண ஆசைப்படுகிறார்கள். தேவைப்பட்டால் மட்டுமே பிறரோடு ( மனைவியோடு) அவற்றைப் பகிர்ந்துகொண்டு தீர்வுகள் குறித்து ஆலோசனை கேட்கிறார்கள். பெண்கள் பிரச்சினைகள், மன உளைச்சல் குறித்துப் பிறரோடு (கணவரோடு ) பேச விரும்புகிறார்கள். கணவர்கள் தங்கள் பேச்சைக் கேட்காவிட்டால், மனம் உடைந்து போகிறார்கள்.
ஆட்சியில், நிர்வாகத்தில், கார்ப்பரேட் உலகத்தில் பெண்கள் நுழைவு அதிகமாகிவருகிறது. பேச்சு வார்த்தைகளிலும் அவர்கள் அதிகமாகப் பங்கேற்கிறார்கள். எனவே, ஆண்களும் பெண்களும், பிரச்சினையைத் தங்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்காமல், ஆண்-பெண் குணநலத் தடைகளையும் மனதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
7. பழகும் முறைத் தடைகள் (Interpersonal Barriers)
நாம் ஒவ்வொருவரும் குணநலன்களால் மாறுபட்டவர்கள், சிலர் ஒருவரைச் சந்திக்கும்போது, தயக்கமே இல்லாமல் அவர்களோடு பேசுவார்கள், நெருங்கிப் பழகுவார்கள். சிலர் புதியவர்களிடம் பேச மாட்டார்கள், எளிதில் மனம் திறக்கமாட்டார்கள். சாதாரணமாக, முதல் தரப்பினரோடு பேச, பழக நாம் விரும்புகிறோம். அடுத்த தரப்பினரைத் தவிர்க்கிறோம். இந்த முன் அனுமானங்கள் கருத்துப் பரிமாற்றத்துக்குத் தடைகளாகிவிடுகின்றன.
பேச்சு வார்த்தைகளுக்குப் போகிறோம். அவர்கள் கலகலப்பாகப் பழகாவிட்டால், நம் கருத்துகளை எடுத்துவைக்கத் தயங்குகிறோம். பேச்சு முன்னேறுவதேயில்லை, டீல்கள் முடிவதேயில்லை. ஒவ்வொருவர் ஆளுமையும் மாறுபடும், அவர்கள் பின்புலத்தால், குடும்பச் சூழ்நிலையால், வளர்க்கப்பட்ட விதத்தால் வித்தியாசப்படும் என்பதை உணர்ந்து, முன் அனுமானங்கள் ஏதுமின்றி, திறந்த மனத்தோடு அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளுங்கள்.
புரிந்துகொண்டால், பயன்படுத்தத் தெரிந்துகொண்டால், இந்த ஏழு தடைக்கற்களும் டீல்களின் வெற்றிக்குப் படிக்கற்கள்!
எஸ்.எல்.வி. மூர்த்தி- slvmoorthy.gmail.com