

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இன்றும் உயர்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு 26 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 30 பைசாவும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல் விலை கடந்த பிப்ரவரி 5-ம் தேதிக்குப் பின் பிப்ரவரி 8-ம் தேதி வரை மாற்றப்படாமல் இருந்து வந்தது. அதேபோல டீசல் விலையும் பிப்.8 வரை மாற்றப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.90.70 ஆக இருந்து, முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்று ரூ.90.96 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை ரூ.83.86 பைசாவிலிருந்து ரூ.84.16 ஆக அதிகரித்துள்ளது.
இதுபோலவே டெல்லியில் பெட்ரோல் விலை ரூ. 88.73ஆகவும், மும்பையில் ரூ. 95.21ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 90.01ஆகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோலவே டீசல் விலை டெல்லியில் ரூ. 79.06 ஆகவும், மும்பையில் ரூ. 86.04 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 82.65ஆகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.