Last Updated : 17 Nov, 2015 10:11 AM

 

Published : 17 Nov 2015 10:11 AM
Last Updated : 17 Nov 2015 10:11 AM

உணவுப் பொருள் பணவீக்கம் மைனஸ் 3.81%

நாட்டின் பணவீக்க விகிதம் தொடர்ந்து மைனஸ் நிலை யிலேயே அக்டோபர் மாதத்திலும் நீடித்தது. ஒட்டுமொத்த விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கடந்த மாதம் பணவீக்கம் மைனஸ் 3.81 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. பணவீக்கம் மைனஸ் நிலையில் கீழிறங்கியபோதிலும் பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் உயர்ந்தே காணப்பட்டது.

ஒட்டுமொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மைனஸ் நிலையில் நீடிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மைனஸ் 4.54 சதவீதம் என்ற நிலை யில் இருந்தது. அதேபோல கடந்த ஆண்டு அக்டோபரில் மைனஸ் 1.66 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

பருப்பு விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 52 சதவீதமும், விலை 85 சதவீதமும் உயர்ந்திருந்தது.

முக்கியமான பருப்பு வகை களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்தபோதிலும் அக்டோபரில் உணவுப் பொருள்களின் பணவீக் கத்தில் பெருமளவு மாறுதல் காணப்படவில்லை.

காய்கறிகள் பணவீக்கம் 2.56 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் மைனஸ் 19.37 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. பால் விலை 1.75 சதவீதமும், கோதுமை விலை 4.66 சதவீதமும் உயர்ந்திருந்தது. உருளை விலை மைனஸ் 58.95 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. எரிபொருள் சார்ந்த பொருள்களின் பணவீக்கம் மைனஸ் 16.32 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. உற்பத்தி துறை சார்ந்த பொருள்களின் அளவு மைனஸ் 1.67 சதவீதம் என்ற நிலையில் இருந்தது.

டிசம்பர் மாதம் 1-ம் தேதி ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை வெளியிட உள்ளது. அப்போது உணவுப் பணவீக்க விகிதம் கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிகிறது. அதேபோல நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலும் தனது வட்டி விகிதத்தை ஆர்பிஐ கணக்கிடும் என்று தெரிகிறது.

தொடர்ந்து மூன்றாவது மாதமாக சில்லரை விற்பனை அடிப்படையிலான பணவீக்கம் அதிகரித்து அக்டோபர் மாதத்தில் 5 சதவீதமாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் பண வீக்கம் 4.62 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பருப்பு மற்றும் பிற உணவுப் பொருள்களின் விலை உயர்வே அதிகரிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நவம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என்று பெரும்பாலான தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலையேற்றம் காரணமாக உற்பத்தி பொருள்களின் விலை உயரக்கூடும் என்பதே இதற்குக் காரணமாகும்.

தற்போதைய வட்டி நிலவரம் ரிசர்வ் வங்கிக்கு சாதகமானதாக இருக்கும் என்று இம்மாத தொடக்கத்தில் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பரில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைத்தது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் (சிபிஐ) 2016-ல் 5.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சகம் வெளியிட்ட பணவீக்கம் அடிப்படையில் உணவுப் பொருள்கள் 0.3 சதவீதமும் உளுத்தம் பருப்பு 17 சதவீதமும், பருப்பு வகைகள் 7 சதவீதமும், பாசிப்பருப்பு 6 சதவீதமும், பார்லி 3 சதவீதமும், ஜோவர், மசூர், உள்ளிட்டவை 2 சதவீதமும், கோதுமை, தேயிலை, பாஜ்ரா உள்ளிட்டவை தலா ஒரு சதவீதமும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ணைக் கோழி இறைச்சி விலை 8 சதவீதம் சரிந்துள்ளது. மாட்டிறைச்சி, மீன், கடல் உணவு ஆகியன 4 சதவீதமும், காபி, உள்நாட்டு மீன் உள்ளிட்டவை தலா ஒரு சதவீதமும் குறைந்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x