Published : 13 Feb 2021 11:31 AM
Last Updated : 13 Feb 2021 11:31 AM
கடந்தாண்டு 6 கோடி பிபிஇ உடைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* கோவிட் தொற்று காலத்தில் பிபிஇ உடைகள், என்-95 முகக் கவசங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன.
கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 6 கோடி பிபிஇ உடைகள், 15 கோடி என்-95 முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டன. பிபிஇ உடைகள் தயாரிப்புக்கு 1100 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
என்-95 முகக்கவசங்கள் தயாரிப்புக்கு 200 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் பிபிஇ உடைகள், 32 லட்சம் என்-95 முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 1.56 கோடி பிபிஇ உடைகள், 2.79 கோடி என்-95 முகக் கவசங்களை கொள்முதல் செய்துள்ளது.
* கோவிட்-19 காரணமாக ஜவுளி ஏற்றுமதி கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில் குறைந்தது.
* ஏற்றுமதியை அதிகரிக்க, ஏற்றுமதி ஜவுளி பொருட்களுக்கான வரி குறைப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
* நவீன விசைத் தறிகளை அமைப்பதற்காக, பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தின் கீழ், குழு பணி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இத்திட்டத்தால் நாடு முழுவதும் 710 விசைத் தறி தொழில் நிறுவனங்கள் பயன் அடைந்தன.
* புதிய ஜவுளிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து கொண்டிருக்கிறது. இது ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
* ஜவுளித்துறை மேம்பாட்டுக்கு உதவ பல கொள்கைகளை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம், விசைத்தறி மேம்பாட்டு திட்டம், தொழில்நுட்ப ஜவுளி திட்டங்கள், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டம், பட்டு சமக்ரா, தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டம் என ஏராளமான திட்டங்கள் ஜவுளித்துறை மேம்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜவுளித்துறையில் ஏற்றுமதி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க ரூ.6,000 கோடி மதிப்பிலான சிறப்பு நிதி உதவி திட்டத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு மூலப் பொருட்கள் மற்றும் விசைத் தறிகள் வாங்க நிதியுதவி அளிக்கப்படுகிறது.
* நாட்டில் தற்போது 35,22,512 நெசவாளர்கள் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
* கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையை ஊக்குவிக்க, ஜவளித்துறை அமைச்சகம், தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டம், விரிவான கைத்தறி தொகுப்பு மேம்பாட்டு திட்டம், கைத்தறி நெசவாளர்கள் நலத் திட்டம், தேசிய கைவினைத் தொழில்கள் மேம்பாட்டு திட்டம், கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி திட்டம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
இவ்வாறு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!