Published : 10 Feb 2021 05:42 PM
Last Updated : 10 Feb 2021 05:42 PM

1.08 கோடி பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தனர்: தர்மேந்திர பிரதான் தகவல்

1.08 கோடி சமையல் எரிவாயு நுகர்வோர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று தெரிவித்துவிட்டதாக எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

01.02.2021 நிலவரப்படி 1.08 கோடி சமையல் எரிவாயு நுகர்வோர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று தெரிவித்துவிட்டதாக எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை, சர்வதேச சந்தையில் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலையை சார்ந்துள்ளது. எனினும், மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயுவின் விலையைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் நுகர்வோருக்கு மானிய விலையில் இந்தப் பொருட்கள் கிடைக்கின்றன. மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியம் சர்வதேச சந்தையின் ஏற்ற/ இறக்கத்தை பொருத்தும், அரசின் முடிவின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அன்றாடம் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருகிறது. 2015-16 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 46.17 அமெரிக்க டாலராகவும், 2019-2020 ஆம் நிதியாண்டில் அது 60.47 அமெரிக்க டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2015-16 ஆம் நிதி ஆண்டில் 202.85 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த கச்சா எண்ணையின் இறக்குமதி, 2019-20 ஆம் நிதியாண்டில் 226.95 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.

சமையல் எரிவாயு இணைப்புகள்:

ஏழை குடும்பங்களுக்கு சுகாதாரமான சமையல் எரிவாயுவை வழங்குவதற்காக பிரதமரின் உஜ்வலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் 5 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்க திட்டமிட்டிருந்ததை அடுத்து, ‌அது 8 கோடியாக நீட்டிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் இலக்கு 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே எட்டப்பட்டது. இந்தத் திட்டம் செயல்படுத்த பட்டதையடுத்து 1.4.2016-இல் 61.9 சதவீதமாக இருந்த சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை, 1.1.2021-இல் 99.5 சதவீதமாக உயர்ந்தது.

2021 ஜனவரி 1-ஆம் தேதி வரை நாட்டில் மொத்தம் 28.74 கோடி நுகர்வோருக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நுகர்வோரின் தேவையை நிறைவேற்றும் வகையில் 1.4.2016 முதல் 1.1.2021 வரை 7208 சமையல் எரிவாயு விநியோக நிலையங்களை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன. 1.1.2021 அன்று நிலவரப்படி, நாட்டில் 199 சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகள் இயங்குகின்றன.

எத்தனால் கொள்முதல்:

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், எத்தனால் கொள்முதல் கொள்கையை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டது. கரும்புச்சாறு, சர்க்கரை, சர்க்கரைப் பாகு போன்றவற்றிலிருந்து தற்போது எத்தனால் கொள்முதல் செய்யப்படுகிறது.

2015-16-இல் 111.4 கோடி லிட்டர் எத்தனால் வாங்கப்பட்ட நிலையில், 2016-17-இல் 66.5 கோடி லிட்டர் எத்தனாலும், 2017-18-இல் 150.5 கோடி லிட்டர் எத்தனாலும், 2018-19-இல் 188.6 கோடி லிட்டர் எத்தனாலும், 2019-20-இல் 173.0 எத்தனாலும் கொள்முதல் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x