

இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று உச்சபட்ச ஏற்றம் பெற்றன. மும்பை பங்குச் சந்தையில் 377 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 25396 புள்ளிகளாக உயர்ந்தது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 109 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 7583 புள்ளிகளானது.
கேரள மாநிலத்தில் தென் மேற்குப் பருவமழை தொடங் கியதும் புதிய அரசு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையும் பங்குச் சந்தை ஏற்றத்துக்குக் காரணமாக அமைந்தன. தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் ஐரோப்பிய மத்திய வங்கி வியாழக்கிழமை தனது வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் ஐரோப்பிய பிராந்தியத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு பணப் புழக்கம் கிடைக்கும் என்கிற ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவும் பங்குச் சந்தை ஏற்றத்துக்குக் காரணமாகும் என்று கூறப்படுகிறது. ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் ஆகியன லாபம் ஈட்டின.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை அதிகரித்து வருகின்றன. வியாழக் கிழமை அந்நிய முதலீட்டு நிறுவன முதலீடு ரூ. 1,368 கோடியாகும்.
மொத்தமுள்ள 12 துறைகளில் 9 துறைகளின் பங்கு விலைகள் ஏற்றம் பெற்றன. பங்குச் சந்தையில் மொத்தம் 2,144 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 959 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.
தொடர்ந்து சில்லறை முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவது புள்ளிகள் உயர் வதற்குக் காரணமாகவும் பங்குச் சந்தையை உயிர்த் துடிப்புடன் வைத்திருக்கவும் உதவுவதாக ரெலிகரே செக்யூரிட்டீஸ் நிறுவன தலைவர் ஜெயந்த் மாங்கலிக் தெரிவித்தார்.
பருவமழை உரிய காலத்தில் பெய்வதற்கான சூழல் உருவானதால் உணவுப் பொருள்களின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பும் காரணமாகும். பணவீக்கம் கட்டுக்குள் வரும்போது ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
முதலீட்டாளர்கள் எண்ணெய், எரிவாயு நிறுவனப் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். இயற்கை எரிவாயு விலையை அரசு ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தும் என்ற தகவல் வெளியானதே இதற்குக் காரணமாகும்.
ஆசிய பிராந்திய பங்குச் சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. சிங்கப்பூர் பங்குச் சந்தை ஏற்றம் பெற்ற அதேசமயம், சீனா, ஹாங்காங், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் நஷ்டத்தைச் சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 24 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. ஓஎன்ஜிசி அதிகபட்சமாக 10.57 சதவீதம் லாபம் ஈட்டியது. கெயில் 7.52 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 3.68 சதவீதமும், ரிலையன்ஸ் 2.97 சதவீதமும், ஹெச்டிஎப்சி 2,96 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2.53 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2.31 சதவீதமும் உயர்ந்தன. சீசா ஸ்டெர்லைட் 2.53 சதவீதமும், இன்ஃபோசிஸ் 1.26 சதவீதமும், டிசிஎஸ் 1.02 சதவீதமும் சரிந்தன. மொத்த வர்த்தகம் ரூ. 5,177 கோடியாகும்.