

சர்வதேச வங்கியான ஹெச்எஸ்பிசி, இந்தியாவில் தனியார் வங்கிச் சேவை பிரிவினை மூடுவதாக அறிவித்துள்ளது. வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட சேவைகளை தனியார் வங்கிச் சேவை பிரிவில் ஹெச்எஸ்பிசி மேற்கொண்டிருந்தது.
எங்களுடைய சர்வதேச யுத்திசார் ஆய்வின் படி இந்தியாவில் இந்த பிரிவை மூடுவதாக ஹெச்எஸ்பிசியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதில் 70 நபர்கள் பணிபுரிகிறார்கள். சாந்தனு அம்பேத்கார் இந்த பிரிவின் தலைவராக இருக்கிறார். இவர்கள் இனி சில்லரை வங்கிச் சேவை (ரீடெய்ல் பேங்கிங்) பிரிவுக்கு மாற்றப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்த பிரிவின் பணியாளர்களுக்கு இமெயில் அனுப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து தனியார் வங்கிச் சேவை பிரிவை இந்தியாவில் மூடுவதாக அறிவித்திருந்த நிலையில் இப்போது ஹெச்எஸ்பிசியும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து மூத்த வங்கியாளர்கள் சில தொடங்கிய பிரைவேட் பேங்கிங் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது.
வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவில் எவ்வளவு தொகையை ஹெச்எஸ்பிசி கையாளுகிறது என்பது உடனடியாக தெரியவில்லை. வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்த பிரிவு மூடப்படும் என்று வங்கி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த பிரிவின் வாடிக்கையாளர்களுக்கு ஹெச்எஸ்பிசி பிரீமியர் என்னும் சர்வதேச வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவுக்கு மாறிக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
ஹெச்எஸ்பிசி வங்கியில் 1,000 இந்தியர்கள் 400 கோடி டாலர் கருப்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பிரிவை மூடுவதற்கும் கருப்பு பண விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று வங்கி தெரிவித்திருக்கிறாது. இந்தியாவில் எங்களுக்கு முக்கியமான சந்தை, இதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம் என்று செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.