Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய ஹைட்ரஜன் திட்டத்தில் பெரும் தொழிலதிபர்கள் இணைவதற்கு வாய்ப்பு

புதுடெல்லி

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தனது பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். இதற்காக தேசிய ஹைட்ரஜன் திட்டம் செயல்படுத்தப்படும் என சுட்டிக்காட்டினார்.

இதை செயல்படுத்துவதன் மூலம் பெரிய தொழில் நிறுவனங்களான ரிலையன்ஸ், டாடா, மஹிந்திரா மற்றும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்டவை பயனடையும் என்று அறிவுசார் நிறுவனமான கேட்வே ஹவுஸ் அமைப்பைச் சேர்ந்த சைதன்ய கிரி குறிப்பிட்டுள்ளார். மீத்தேன் பொருளாதாரம் என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஹைட்ரஜன் திட்டத்தில் இந்நிறுவனங்கள் தங்களை ஒரு அங்கமாக இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலை நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளதைப் போல ஹைட்ரஜன் கவுன்சில் அல்லது ஐரோப்பிய ஹைட்ரஜன் கூட்டமைப்பு போன்ற அமைப்பை ஒருங்கிணைந்து உருவாக்க முடியும். இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தொழில் நிறுவனங்களான டாடா, மஹிந்திரா, ஐஷர் உள்ளிட்டவை சேர முடியும். அத்துடன் ரசாயன நிறுவனங்களான ரிலையன்ஸும் தன்னை இணைத்துக் கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளதாக பேட்டி ஒன்றில் சைதன்ய கிரி குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தியை உருவாக்க ஹைட்ரஜன் மட்டும்தான் தீர்வு. இத்தகைய எரிபொருளை தயாரித்தால் அதைப் பயன்படுத்தும் கார்களுக்கு ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவசியம். ஹைட்ரஜன் எளிதில் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டதால் இதை செயல்படுத்த அதிநவீன தொழில்நுட்பமும் பாதுகாப்பு அம்சங்களும் அவசியம்.

இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஜெர்மனி முன்னோடியாகத் திகழ்கிறது. அங்கு இதுபோன்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. 2023-ம் ஆண்டுக்குள் 400 ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க அந்நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக ஹைட்ரஜன் கவுன்சிலை அந்நாடு அதிகபட்சமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று கிரி சுட்டிக் காட்டியுள்ளார்.

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நார்வே, ஸ்வீடன், நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளின் உதவியை இந்தியா நாடலாம். ஆனால் அதை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டியது அவசியம். இந்திய பரப்பளவுக்கேற்ப இதை விரிவாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். நார்வேயில் மொத்த மக்கள் தொகை 55 லட்சம். ஆனால் மும்பை மாநகரின் மக்கள் தொகை 2 கோடிக்கும் மேலாகும். பெரு நகரங்களில் செயல்படுத்த இந்த நாடுகளின் மாதிரியைப் பின்பற்றலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹைட்ரஜன் வாயுவை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு தொழில்நுட்பத் திறன் வாய்ந்த சர்வதேச நிறுவனங்களை ஈடுபடுத்துவதில் தவறில்லை. ஏர் புராடெக்ட்ஸ், லிண்டே உள்ளிட்ட நிறுவனங்கள் ஹைட்ரஜன் வாயு பயன்பாட்டில் முன்னணி நிறுவனங்களாகும். இந்நிறுவனங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹைட்ரஜன் வாயு நிரப்பு நிலையங்களை பாதுகாப்பானதாக அமைக்க முடியும். அத்துடன் அவற்றை பத்திரமாக சேமித்து வைப்பதற்கான தொழில்நுட்பத்தையும் இவை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்தெடுப்பது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். இயற்கை எரிவாயுவில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்தெடுப்பது தனி ஏற்பாடாகும். இதன் மூலம் கார்பனை பிரித்தெடுக்க முடியும். பேட்டரி கார் உபயோகம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் லித்தியம் பேட்டரி தயாரிப்பு சவாலாக உள்ளது என்று கிரி கூறியுள்ளார்.

லித்தியம் பேட்டரியை பயன்படுத்துவதை விட ஹைட்ரஜன் வாயு மூலம் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வது எளிதானது. பேட்டரி கார் அதிகபட்சம் 200 கி.மீ. முதல் 250 கி.மீ. வரை மட்டுமே ஓடும். பிறகு அதை ரீ சார்ஜ் செய்ய வேண்டும்.

ஹைட்ரஜன் வாயுவை சரியாக பயன்படுத்தினால் அதுதான் சரியான மாற்றாக இருக்க முடியும். பெருகிவரும் இந்திய மக்கள் தொகைக்கேற்ப எரிசக்தி தேவையை ஹைட்ரஜனால் மட்டுமே பூர்த்தி செய்ய இயலும் என்றும் கிரி சுட்டிக் காட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x