

டெல்லியில் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்று மாசுவை குறைக்க, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் புதிதாக உருவாக்கப்பட்டது. தில்லி தலைநகர் மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள், வழக்கமான எரிபொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து தூய்மையான இயற்கை எரிவாயுவுக்கு மாற காற்றுத் தர மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
இந்த முயற்சியில், டெல்லியில் உள்ள 50 தொழிற்சாலை பகுதிகளில் உள்ள 1627 தொழிற்சாலைகள் குழாய்வழி இயற்கை எரிவாயுவுக்கு மாற அடையாளம் காணப்பட்டது. இங்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க கெயில், ஐஜிஎல் மற்றும் தில்லி அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது 1627 தொழிற்சாலைகளுக்கும் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 1607 தொழிற்சாலைகள் இயற்கை எரிவாயுவை பயன்படுத்த தொடங்கி விட்டன. எல்பிஜி எரிபொருளை பயன்படுத்தும் மீதமுள்ள 20 தொழிற்சாலைகளும், இந்த மாத இறுதிக்குள், குழாய் வழி இயற்கை எரிவாயுவுக்கு மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டெல்லியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் சுத்தமான எரிபொருளுக்கு மாறியுள்ளன.