Published : 02 Feb 2021 08:05 AM
Last Updated : 02 Feb 2021 08:05 AM

தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தை மாற்றியமைக்க ரூ.3000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு

தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தை, ரூ.3000 கோடிக்கு மேல் செலவு செய்து மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இளைஞர்களுக்கு பணி பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக, தொழில் பழகுநர் சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போதுள்ள தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம், ரூ.3000 கோடிக்கு மேல் மாற்றியமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் தொழிற் பயிற்சி பெறுவர்.

இவர்களின் தொழில் திறமைகளை அதிகரித்து, மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுடன் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதே போன்ற கூட்டு பயிற்சி திட்டம் இந்தியா-ஜப்பான் இடையே மேற்கொள்ளப்படவுள்ளது. பல நாடுகளுடன் இது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்தாக நிதியமைச்சர் தெரிவித்தார்.


தேயிலை தொழிலாளர்களின் நலத் திட்டத்துக்கு ரூ.1000 கோடி:

அசாம் மற்றும் மேற்கு வங்க தேயிலை தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலத்திட்டங்களுக்கு ரூ.1000 கோடி வழங்கப்படும் என நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்காக சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்.

பழங்குடியினர் பகுதிகளில் பள்ளிகள்:

பழங்குடியினர் பகுதிகளில் 750 உண்டு, உறைவிட பள்ளிகள் (ஏகலைவா) அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பள்ளியும் ரூ.20 கோடி முதல் ரூ.38 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளன. மலைப் பகுதி மற்றும் சிக்கலான இடங்களில் ரூ.48 கோடி செலவில் அமைக்கப்படும். இத்திட்டம், பழங்குடியின மாணவர்களுக்கு வலுவான கல்வி கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தும்.

பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் மாற்றியமைப்பு:

பட்டியலின மாணவர்களின் நலனுக்காக, மேல் நிலைப் பள்ளிப் படிப்பை தொடரும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்காக அடுத்த 6 ஆண்டுகளுக்கு ரூ.35,219 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டம் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு பலன் அளிக்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.15,700 கோடி:

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை திட்டங்களுக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டில் ரூ.15,700 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நடப்பாண்டு பட்ஜெட் மதிப்பீட்டை விட இரண்டு மடங்குக்கு மேல் அதிகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x