

100 புதிய சைனிக் பள்ளிகள், அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மக்களவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அவர் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
தொழில்துறை:
அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.
அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
கல்வித்துறை:
100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.
லே -யில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள்.
அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.
தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு.
விண்வெளித்துறை:
இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது.
2021-ம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது.