Published : 01 Feb 2021 11:14 AM
Last Updated : 01 Feb 2021 11:14 AM

மத்திய பட்ஜெட் 2021: கரோனா தடுப்பூசிக்கு ரூ.35000 கோடி ஒதுக்கீடு; நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரை

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். கரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வரும் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர்.

அதன்பின்னர் நிர்மலா சீதாராமன், அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர் நாடாளுமன்றம் தொடங்கியதை தொடர்ந்து மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மக்களவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அவர் தனது உரையில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பெருந்தொற்றால், நாடு இதுவரை காணாத நீண்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா கட்டுப்படுத்தப்பட்டு, தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு பொருளாதார பின்னடைவு மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

கரோனா பரவல் ஏற்பட்ட மோசமான காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். கடந்த ஆண்டு நான் தாக்கல் செய்தபோது இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

பொதுமுடக்கத்தை அறிவிக்காமல் இருந்திருந்தால், கரோனா பெருந்தொற்றினால் இந்தியா பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கும். இந்திய மக்கள் கரோனா பயத்திலிருந்து விரைந்து வெளியில் வர வேண்டும் என்பதற்காக தற்போது கரோனாவுக்கு எதிராக இந்தியா இரண்டு தடுப்பூசிகளை விரைவாக கொண்டுவந்துள்ளது.

நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுத் தானியங்கள் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டன. இதற்காக பல லட்சம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய மூன்று அம்சங்களில் சுகாதாரத் துறை கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் மக்களவையில் தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

இம்முறை முதன்முறையாக, மின்னணு பதிவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை காண்பதற்கு இணையதள முகவரி அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்:

* கோவிட் தடுப்பூசி தயாரிப்பு பணிகளுக்காக பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு நிதி ஒதுக்கீடு

* தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய நெடுங்சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

* முன்பு அறிவிக்கப்பட்ட சுயசார்பு இந்தியா திட்டங்கள் 5 மினி பட்ஜெட்களுக்கு சமமானது.

* சுயசார்பு திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான பல அறிவிப்புகள் உள்ளன.

* நாட்டின் சுற்றுச்சூழலை மேம்படுத்த பழைய வாகனங்களை திரும்பப் பெறுவதற்கான திட்டம் வகுக்கப்படும்.

* நாடு முழுவதும் ஊட்டச்சத்தை அதிப்படுத்துவதற்கான திட்டமும் வகுக்கப்படும்.
* இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.

* ஜவுளித்துறைய ஊக்கப்படுத்த மிகப்பெரிய அளவில் முதலீட்டுப் பூங்கா அமைக்கப்படும்.

* அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* மூன்று ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய மூன்று அம்சங்களில் சுகாதாரத் துறை கவனம் செலுத்தி வருகிறது.

* கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி அதிகரிப்பு

* சுயசார்பு இந்தியா சுகாதார திட்டத்திற்கு 64,180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x