

கரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று வரும் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்கிறார். இம்முறை முதன்முறையாக, மின்னணு பதிவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை காண்பதற்கு இணையதள முகவரி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டின் முதல்காலாண்டில் நாட்டின் ஜிடிபி மைனஸ் 23.9 சதவீதமாக சரிந்தது. 2020-21-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் மைனஸ் 9.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
வருமானம் குறைந்ததால் வீடுகளில் செலவிடுவது குறைந்துள்ளது. இதன் தொடர் விளைவாக தனியார் முதலீடுகளும் குறைந்துள்ளன. இருந்தபோதிலும் 2021-ம்நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் சார்ந்து பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. மேலும் முதலீட்டுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் விதமாக பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.