

அதிகரித்துவரும் வாராக் கடன் பிரச்சினையை சரிசெய்வதற்காக உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய அரசு அமைக்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பொதுத்துறை வங்கி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இது குறித்து விவாதிக் கப்பட்டது. சில துறைகளில் அதிக கவனத்தோடு இருக்கப்போவ தாகவும் மத்திய நிதிச்சேவைகள் செயலாளர் அஞ்சலி சி துகால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாத இறுதியில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 6.03 சதவீதமாக இருக்கிறது. மார்ச் மாதத்தில் இது 5.20 சதவீதமாக இருந்தது.
நாட்டின் மொத்த வாராக் கடன் கவலை அளிக்கிறது. இது குறித்து அரசாங்கம் விழிப்புடன் இருக்கிறது. ஸ்டீல், அலுமினியம், டெக்ஸ்டைல் ஆகிய துறைகளின் இந்த பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருவதாக துகால் கூறினார்.
பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக் கடனில் இந்த மூன்று துறைகள்தான் அதிகளவு கடனை வைத்துள்ளன.
பல்வேறு காராணிகளின் விளைவுதான் மொத்த வாராக் கடன். இதை பல பரிமாண முறைகளை கொண்டு அணுகவேண்டும் என்று சமீபத்தில் நிதித்துறை இணை யமைச்சர் சின்ஹா கூறினார்.
பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரூ. 27,000 கோடி இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் 35 சதவீதத்திற்கும் கீழே இறங்கியுள்ளது என்று துகால் கூறினார். மேலும் சிறிய வங்கிகள் சிறிய பகுதிகளில் சேவை செய்து வருகிறது. இது வங்கிகளின் எல்லையை விரிவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.