

ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இயக்கும் 930 விமானங்களை லுப்தான்சா நிறுவனம் ரத்து செய்தது.
லுப்தான்சா விமான பணியாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் முடிவு எட்டப்படாததைத் தொடர்ந்து 930 விமானங்களை ரத்து செய்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
பிராங்பர்ட், மூனிச், டஸல்டர்ப் ஆகிய பகுதிகளிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் நீண்ட தொலைவு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தாங்கள் விரும்புவதாக பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் நிபந்தனைகளோடு மத்தியஸ்தம் செய்வதை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளது. இரு தரப்பினரிடம் பேச்சு நடத்த ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தரை நியமிக்கலாம் என நிர்வாகம் யோசனை தெரிவித்திருந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இடையில் ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் வேலை செய்தனர்.
முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பும் 19 ஆயிரம் பணியாளர் களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இதுவரை 2,700 விமான சேவைகளை லுப்தான்சா நிறுவனம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. உயர்த்தப்பட்ட போனஸ் சலுகை மற்றும் ஓய்வூதிய சலுகை உள்ளிட்டவற்றை அளிக்க லுப்தான்சா நிர்வாகம் முன்வந்த போதிலும் அதை பணியாளர் சங்கம் ஏற்கவில்லை.
செலவு குறைப்பு நடவடிக்கைக்காக புதிதாக ஓய்வூதிய பலன் குறைப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் 2013-ம் ஆண்டு போடப்பட்ட ஓய்வூதிய பலன் அடிப்படையில் பலன்கள் தர வேண்டும் என்று பணியாளர்கள் கோரி வருகின்றனர். ஆனால் அவ்விதம் அளிப்பது அதிக செலவு பிடிக்கும் என நிர்வாகம் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை லுப்தான்சா நிர்வாகம் அணுகி யுள்ளது.