

தீபாவளி சமயத்தில் ஆன்லைன் மூலம் வீடு வாங்க சுமார் 10,000 நபர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள் என்று முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீல் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் மூலமாக வீடுகளை பார்ப்பது, வாங்குவது உள்ளிட்டவற்றை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றும் ஸ்நாப்டீல் தெரிவித்திருக்கிறது.
நவம்பர் 3 முதல் 9-ம் தேதி வரை தள்ளுபடி விலையில் அடுக்குமாடி குடியிருப்புகளை இந்தியாவின் முன்னணி நகரங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஸ்நாப்டீல் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு சுமார் 10,000 நபர்கள் முன்பதிவு செய்திருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாகவே ரியல் எஸ்டேட் துறையில் மந்தமான விற்பனையே நடந்து வருகிறது. பணம் இல்லாததால் பல திட்டங்கள் ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன.
டெல்லி, மும்பை, நவிமும்பை, தானே, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் பூனே ஆகிய நகரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள். முன்பதிவு செய்யப்பட்ட வீடுகளின் மதிப்பு சராசரியாக 55 லட்ச ரூபாய் அளவில் உள்ளது. இதில் 1,000 வாடிக்கையாளர்கள் வீட்டுகடன் மூலமாக வாங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள்
கோத்ரெஜ் பிராபர்டீஸ், பிரிகேட், மஹிந்திரா லைப்ஸ்பேஸ், ஐஆர்இஓ, அர்தா, ராம்கே எஸ்டேட்ஸ், சன்டெக் ரியால்டி, லவாசா கார்ப் உள்ளிட்ட பல டெலவப்பர்களின் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் பதிவு செய்தனர்.
இதில் முன்பதிவு செய்பவர் களுக்கு விற்பனை விலையில் தள்ளுபடி, கார் பார்க்கிங் முன்பண கட்டணம் தள்ளுபடி, படுக்கை அறை ஏசி மற்றும் மாடுலர் கிச்சன் ஆகியவை இலவசம் என்று ஸ்நாப்டீல் அறிவித்திருந்தது.