Published : 24 Jan 2021 10:33 AM
Last Updated : 24 Jan 2021 10:33 AM

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நார்த் பிளாக்கில் நடைபெற்றது.

நிதிநிலை அறிக்கையின் ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக இதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை பூட்டிய அறைக்குள் இருப்பார்கள். இதற்கு முன்பாக ஒவ்வொரு வருடமும் அல்வா நிகழ்ச்சி நடைபெறும்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் 2021-22க்கான மத்திய நிதிநிலை அறிக்கை, காகிதமற்ற முறையில் முதன்முறையாக தாக்கல் செய்யப்படும். 2021 பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் நிதிநிலை அறிக்கையின் ஆவணங்கள் குறித்த தகவல்களை எளிய முறையில் பெறுவதற்காக மத்திய நிதிநிலை அறிக்கை கைப்பேசி செயலி (Union Budget Mobile App) என்ற செயலியையும் இன்றைய நிகழ்ச்சியில் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். வருடாந்திர நிதி நிலை அறிக்கை, நிதி மசோதா உள்ளிட்ட 14 ஆவணங்களை இந்த செல்பேசி வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.

இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் தளங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த செயலியில் ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும், தேடவும், அச்சிடவும் வசதிகள் உள்ளன. பொருளாதார விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின்படி தேசிய தகவலியல் மையம் வடிவமைத்துள்ள இந்த செயலியை www.indiabudget.gov.in என்ற மத்திய நிதிநிலை அறிக்கை இணையதளத்தின் வாயிலாகவும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரின் உரை நிறைவடைந்த பிறகு இந்த ஆவணங்கள் கைப்பேசி செயலியில் இடம்பெறும்.

அல்வா நிகழ்ச்சிக்குப் பிறகு நிதிநிலை அறிக்கை பணிகள் குறித்து நிதியமைச்சர் ஆய்வுசெய்து, அதிகாரிகளுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x