

கடந்த 8 வருடங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பர் காலாண்டில் இந்தியாவில் தங்கம் வாங்குவது குறைய வாய்ப்புள்ளது. முதலீட்டுக்கான தேவை குறைவு மற்றும் அடுத்தடுத்த வறட்சியால் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும் வருவாய் குறைந்ததால் தங்கத்துக்கான தேவை குறைந்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் தங்கத்தின் தேவை 150 டன்னிலிருந்து 175 டன்னுக்குள்ளாக இருக்கும் என்று அனைத்து இந்திய ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி டிரேட் பெடரேஷனைச் சேர்ந்த பச்ராஜ் பம்லவா தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் தங்கத்தின் தேவை 201.6 டன்னாக இருந்தது. கடந்த 5 வருடத்தின் டிசம்பர் காலாண்டு சராசரி 231 டன்னாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்திருக்கிறது.
பொதுவாக டிசம்பர் காலாண்டு திருமணங்கள் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் காலம். எனவே தங்கம் வாங்குவதற்கு சிறந்த நாட்கள் என்பதால் தங்க விற்பனை அதிகரிக்கும்.
பாரம்பரிய சொத்தாக தங்கம் இருப்பதால், மூன்றில் இரண்டு பங்கு தேவை கிராமப்புறங்களிருந்து வரும். ஆனால் இந்த வருடம் பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தங்கத்தை வாங்கும் சக்தி குறைந்துவிடும்
நவம்பர் பாதியில் தீபாவளி பண்டிகையால் தங்கத்தின் தேவை நன்றாக இருந்தது. ஆனால் பின்னர் நடுநிலையாக இருந்தது என்று ஜேஜே கோல்டு ஹவுஸ் உரிமையாளர் ஹர்ஷத் அஜ்மரா கூறினார்.
இந்த வருடம் இந்திய ரூபாய் 5 சதவீதம் சரிந்தது. அதனால் சர்வதேச அளவில் தங்கம் விலை சிறிது குறைந்தாலும் இந்தியாவில் தங்கம் விலை குறையவில்லை.