

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) சஞ்ஜீவ் கபூர் ராஜிநாமா செய்திருக்கிறார். நிறுவனத்தின் நிறுவனர் அஜய் சிங் மீண்டும் பொறுப்புக்கு வந்த 10 மாதங் களில் இந்த முடிவை எடுத்திருக் கிறார் சஞ்ஜீவ் கபூர்.
48 வயதாகும் கபூர், நிறுவனத்தின் முந்தைய தலைவரான கலாநிதி மாறனால் கடந்த 2013-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இவரது பணிக்கால ஒப்பந்தம் முடிவடைய இன்னும் ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும் சூழ்நிலையில் இவர் பதவியை ராஜிநாமா செய்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கபூர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
நிறுவனத்தின் தலைமை மாறிய பிறகு, உயரதிகாரிகள் பலர் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கடந்த 2010-ம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திலிருந்து நிறுவனர் அஜய் சிங் வெளி யேறினார். அதன் பிறகு கடந்த பிப்ரவரியில் கலாநிதி மாறனிடம் இருந்து 58.46 சதவீத பங்குகளை வாங்கி மீண்டும் நிறுவனத்தின் தலைவரானார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தலைமைச் செயல் அதிகாரி இல்லாமலே கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த நெய்ல் மில்ஸ் வெளியேறிய பிறகு புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படவில்லை.