Published : 22 Jan 2021 09:08 AM
Last Updated : 22 Jan 2021 09:08 AM

விமான நிலையங்களை அதானி குழுமம் பெறுவதற்கு நிதி அமைச்சகம் எதிர்ப்பா? - விமானப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

ஆறு விமான நிலையங்களை அதானி குழுமம் பெறுவதற்கு நிதி அமைச்சகமும் நிதி ஆயோக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவலை உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

பொதுத்துறை தனியார் கூட்டு ஏல முறையின் கீழ் 6 விமான நிலையங்களுக்கு 88 பதிவுகள் தளத்தில் பெறப்பட்டன

2021 ஜனவரி 15 தேதியிட்ட செய்தி ஒன்றில், 2019 பொதுத்துறை தனியார் கூட்டு ஏல முறையில் ஆறு விமான நிலையங்களை அதானி குழுமம் பெறுவதற்கு நிதி அமைச்சகமும், நிதி ஆயோக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால், அதை அரசு புறந்தள்ளியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்திய அரசின் ஏல ஒப்பந்த இணையதளத்தின் மூலமாக போட்டித்திறன் மிக்க, வெளிப்படையான ஏல நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. உலகெங்கிலும் இருந்து 25 நிறுவனங்கள் பதிவு செய்த நிலையில், ஆறு விமான நிலையங்களுக்கு 86 பதிவுகள் பெறப்பட்டன.

இந்த பதிவுகளில், 10 பல்வேறு நிறுவனங்களில் இருந்து 32 கோரிக்கைகள் ஆறு விமான நிலையங்களுக்கு பெறப்பட்டன. ஏல நடைமுறை வெளிப்படையாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட எந்த நிறுவனமும் எந்தவிதமான எதிர்ப்பையோ, கவலையையோ தெரிவிக்கவில்லை.

ஏல விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது எந்த நிறுவனம் வெற்றி பெறும் என்பது யாருக்கும் தெரியாது. ‘பயணி ஒருவருக்கான கட்டணத்திற்கு’ எந்த விண்ணப்பம் அதிக ஏலத்தொகையை குறிப்பிட்டிருக்கிறதோ, அதுவே வெற்றியாளராக தீர்மானிக்கப்படும்.

அந்த வகையில், தகுதி வாய்ந்த ஏல விண்ணப்பங்களை திறந்து பார்த்த பிறகு,அதானி எண்டெர்பிரைசஸ் லிமிடெட்டின் ஏலத்தொகை மற்ற நிறுவனங்களை விட ஆறு விமான நிலையங்களுக்கும் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

குறிப்பிட்ட செய்தியில் இருந்த குற்றச்சாட்டுகளும், கேரள உயர் நீதிமன்றத்தில், இது தொடர்பாக பல்வேறு மனுதாரர்கள் வைத்த குற்றச்சாட்டுகளும் ஒரே மாதிரியானவை ஆகும்.

2020 அக்டோபர் 19 தேதியிட்ட தீர்ப்பில், இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பொதுத்துறை தனியார் கூட்டு செயல்முறைக்கு ஒப்புதல் அளித்தது. எனவே, செய்தித்தாளில் வெளியான செய்தி தவறானதாகும்.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x