Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

மிக மோசமான சூழலில் இருந்தாலும் பொருளாதாரம் விரைவில் மீள்வதற்கு வாய்ப்பு: இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை

“கரோனா வைரஸ் ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை கண்டுள்ளது. எனினும் விரைவில் மீள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன’’ என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்துக்கான அறிக்கையை ஆர்பிஐ நேற்று வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அடுத்த கட்ட கரோனா வைரஸ் பரவல் சூழலை எதிர்கொள்ளும் முன்பாக, ஏற்கெனவே இந்தியா மிக மோசமான பொருளாதார சூழலை சந்தித்துள்ளது. இந்த சரிவில் இருந்து மீண்டு வருவதற்கு ஆட்சியாளர்கள் மேலும் பல சலுகைகளை அளித்தாக வேண்டும்.

தற்போதைய சூழலில் நுண் பொருளாதார நடவடிக்கைகளில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனினும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இலக்கை எட்டுவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.

வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதோடு பண வீக்க அளவும் கட்டுக்குள் இருப்பது இலக்கை அடைவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழல் ஸ்திரமாக நீடிக்கும்பட்சத்தில் அரசு மேலும் அளிக்கும் சலுகைகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

ஆசிய பிராந்தியத்தில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகஇந்தியா திகழ்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மைனஸ் 7.5 சதவீதமாக உள்ளது. வரும் காலாண்டில் சரிவிலிருந்து மீண்டு கணிசமான வளர்ச்சியை எட்டும் என பொருளாதார காரணிகள் உணர்த்துகின்றன. நுகர்வு அடிப்படையிலான வளர்ச்சியாக இது இருக்கும் என்று தெரிகிறது.

வளர்ச்சியை துரிதப்படுத்த முதலீடுகள் அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் மைனஸ் நிலையில் இருந்து வளர்ச்சி எட்டப்பட்டு ஸ்திரமான வளர்ச்சியை எட்ட முடியும்.

நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நிதிநிலை அறிக்கையில் கைவசம் உள்ள நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. உற்பத்தித் துறைகளில் இது பயன்படுத்தப்படும் வகையில் ரெபோ விகிதம் மாற்றப்பட வேண்டும். இந்தத் தொகை உண்மையாக செலவிடப்பட வேண்டும். குறிப்பாக முதலீட்டு நடவடிக்கைகள் பெருக வேண்டும். பண வீக்கம் மேலும் மைனஸ் நிலையை எட்டி மந்த நிலை உருவாகாமல் பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது.

வங்கிகள் ஆரோக்கியம்

நிதித்துறையின் கடன் சுமைகள் போக்கப்பட வேண்டும். வங்கிகளைப் பொறுத்தமட்டில் அவற்றின் நிதி நிலை ஆரோக்கியமான அளவிலேயே உள்ளது. குறிப்பாக 2008-ம் ஆண்டு உருவான பெருமந்த பொருளாதார நிலையுடன் ஒப்பிடுகையில் வங்கிகளின் நிதி வளம் தற்போது மிகவும் சிறப்பாகவே உள்ளது.

இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x