

துறைமுகங்கள் மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள தோர்டோ என்ற இடத்தில் இன்று முதல் 23ம் தேதி வரை நடக்கிறது.
இதற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை வகிக்கிறார். இதில் கடல்சார் தொலைநோக்கு - 2030-க்கான திட்டங்கள் இறுதி செய்யப்படுகின்றன. நகர்ப்புற போக்குவரத்தின் புதிய அம்சங்கள், சரோத்-துறைமுகங்களை தீவிரமாக அமல்படுத்துதல், சர்வதேச நடுவர் மன்ற விஷயங்கள் குறித்து ஆராயப்படுகின்றன.
துறைமுகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான கருத்துக்களைப் பெறுவது, சரக்குகள் கையாளும் செலவைக் குறைப்பதற்கு சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றுவது, இணைப்பை மேம்படுத்துவது, தொழில் செய்வதை எளிதாக்குவது போன்ற விஷயங்கள் குறித்து இந்த மூன்று நாள் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.