

2025-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை பாதியாக்க் குறைக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பொதுப்பணித்துறை மற்றும் சாலை கட்டமைப்பு தொடர்பான பல்வேறு முகமைகளில் உள்ள பொறியாளர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த மூன்று நாள் கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
தேசிய சாலைப் பாதுகாப்பு குழுவின் 19-வது கூட்டத்தில் பேசிய அவர், சாலை விபத்துகளை குறைப்பது படிப்படியாக நடக்காதென்றும், தொடர்புடைய அனைவரும் இதற்கு உடனடியாக உச்சக்கட்ட முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
சுவீடனை உதாரணமாகக் காட்டிய அமைச்சர், அங்கு சாலை விபத்துகள் பொறுத்துக் கொள்ளப்படுவதில்லை என்று கூறினார். ஒவ்வொரு நாளும் 30 கிலோமீட்டருக்கான சாலைகளை இந்தியா கட்டமைக்கிறதென்றும், பெருந்தொற்றின் போது இது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பான சாலைப் போக்குவரத்தை நோக்கி மக்களை ஊக்குவிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்ட அவர், இதில் ஈடுபட்டுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப் பாராட்டினார்.
சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக சமூக ஊடகங்களைப் பெரிய அளவில் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். சாலைப் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று இருப்பதாகவும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களது தொகுதிகளில் சாலை விபத்துகளை குறைப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.