

புதிதாக அமைந்திருக்கும் நரேந்திர மோடி அரசு தன்னுடைய முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் சூழ்நிலையில் உலக வங்கி தன்னுடைய ஆலோசனையைத் தெரிவித்திருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரியை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மானியங்களைக் குறைக்க வேண்டும், வளர்ச்சியை அதிகரிக்க புதிய வரிவிதிப்பு வழிகளை கண்டறிய வேண்டும் என்று உலக வங்கி தன்னுடைய ஆலோசனையைத் தெரிவித்திருக்கிறது.
இவற்றை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் நிதி நிலைமை சீரடைந்து வளர்ச்சி அதிகரிக்கும். வறுமையும் குறையும் என்று உலக வங்கியின் இந்திய பிரிவு இயக்குநர் ஒன்னோ ரௌல் தெரிவித்திருக்கிறார். உலக பொருளாதார எதிர்கால வாய்ப்பு குறித்த உலக வங்கியின் அறிக்கையை வெளியிட்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்த அறிக்கையை தயாரித்த ஆண்ட்ரூ பர்ன்ஸும் உடனிருந்தார். சர்வதேச அளவில் இந்த அறிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டில் 5.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஏப்ரலில் 5.7 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று உலக வங்கி கணித்திருந்தது. 2015-16-ம் நிதி ஆண்டில் 6.6 சதவீத வளர்ச்சியும் 2016-17-ம் நிதி ஆண்டில் 6.6 சதவீத வளர்ச்சியும் இருக்கும் என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. சர்வதேச அளவில் தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் உள்நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
உற்பத்தி துறையில் முதலீடுகள் அதிகரிப்பதால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று ஒன்னோ ரௌல் தெரிவித்தார்.
மேலும், வரி விதிப்பு முறைகளை எளிமையாக்கி, வரிவரம்புகளைத் தளர்த்த வேண்டும் என்றார். அரசு பொதுப் பற்றாக்குறை குறைந்துக் கொண்டே வந்தாலும், இன்னமும் அதிகமாகத்தான் இருக்கிறது. இப்போதைக்கு ஜி.டி.பி.யில் 2 சதவீதம் இருக்கிறது. இது 2007-ம் ஆண்டு நிலைமையை விட அதிகம். இதை குறைப்பதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அடுத்த மாத ஆரம்பத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.