ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு: தமிழகம் கூடுதலாக ரூ.4,813 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு: தமிழகம் கூடுதலாக ரூ.4,813 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்
Updated on
1 min read

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டதால், வெளிச் சந்தையில் தமிழகம் கூடுதலாக ரூ.4,813 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை மத்திய நிதியமைச்சகத்தின், செலவினத்துறை கொண்டு வந்தது. இந்த சீர்திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட 11வது மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இதனால், வெளிசந்தையில் ரூ.4,813 கோடி கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட தமிழகம் தகுதி பெற்றுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய செலவினத்துறை வழங்கியுள்ளது.

ஆந்திர பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, திரிபுரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை நிறைவு செய்துள்ளன. தற்போது இந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இணைந்துள்ளது.

இது மக்களுக்கான முக்கியமான சீர்திருத்தமாகும். இத்திட்டம் அமல்படுத்தப்படுவதன் மூலமாக மக்கள், குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மூலம் நாடு முழுவதும் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.

மத்திய அரசின் இந்த சீர்திருத்தத்தை நிறைவேற்றியதால், இந்த மாநிலங்கள் மாநில மொத்த உற்பத்தியில் 0.25 சதவீத அளவுக்கு கூடுதலாக கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில் மொத்தம் ரூ.30, 709 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய செலவினத்துறை அனுமதி வழங்கியது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், எளிதில் தொழில் தொடங்குவதற்கான சீர்திருத்தம், நகர்ப்புற/உள்ளாட்சி பயன்பாடுகளுக்கான சீர்திருத்தம், மின்துறை சீர்திருத்தம் இவற்றை அமல்படுத்தும் மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற மத்திய செலவினத்துறை அனுமதித்து வருகிறது.

இது வரை 11 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தையும், 4 மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தத்தையும் மேற்கொண்டுள்ளன. இதனால் இந்த மாநிலங்கள் மொத்தம் ரூ.61,339 கோடி அளவுக்கு கூடுதல் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in