Published : 16 Jan 2021 08:35 AM
Last Updated : 16 Jan 2021 08:35 AM

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் அறிமுகம்

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைத்தார்.

பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்படத்தில், ஓட்டுநர் இல்லா நவீன மெட்ரோ ரயில்களை தயாரிக்கிறது. மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்காக தயாரிக்கப்பட்ட ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலை, பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் வளாகத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பேசியதாவது:
மும்பை மெட்ரோ திட்டத்தில் 63 சதவீதம் உள்நாட்டு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் இது 75 சதவீதமாக அதிகரிக்கப்படும். பிரதமர் விடுத்த தற்சார்பு இந்தியா அழைப்புக்கு, இந்திய தொழில் நிறுவனங்கள் காட்டும் அபரிமித பதில் நடவடிக்கையை இது காட்டுகிறது.

இந்த ஓட்டுநர் இல்லா மெட்ரோ திட்டம், மற்ற இந்திய நிறுவனங்களுக்கும், குறிப்பாக பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும். இது இந்தியா உலக தயாரிப்பு மையமாக மாற வழிவகுக்கும். இது 2025ம் ஆண்டுக்குள் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி 5 மில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை எட்டவும், பாதுகாப்பு தளவாட நிறுவனங்களின் வருவாய் 25 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கவும் உதவும்.

இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இதற்கிடையே ‘ஏரோ இந்தியா-21’ கண்காட்சிக்கான தயார் நிலை குறித்தும் பெங்களூரில் நடந்த உயர்நிலைக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். இந்த கண்காட்சி பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதிவரை நேரடியாக, மெய்நிகர் முறையிலும் நடத்தப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x