

2020, டிசம்பர் மாத மொத்த விலை குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பருடன் ஒப்பிடுகையில், டிசம்பரில் பெட்ரோலியம் விலை 5.47 சதவீதம் உயர்ந்துள்ளது.
2020, டிசம்பர் மாதத்துக்கான(தற்காலிக) மொத்த விலை குறியீட்டு எண்களை தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் 2020 டிசம்பர் மாதத்துக்கான பணவீக்கம் 1.22 சதவீதமாக (தற்காலிகம்) உள்ளது. இது கடந்தாண்டின் இதே மாதத்தில் 2.76 சதவீதமாக இருந்தது.
முதன்மைப் பொருட்கள் குழுவின் குறியீட்டு எண் 2020 டிசம்பர் மாதத்தில் (தற்காலிகம்) -3.11 சதவீதம் குறைந்து 146.5 ஆக உள்ளது. இது 2020 நவம்பர் மாதத்தில் 151.2 ஆக இருந்தது. 2020ம் ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில், டிசம்பரில் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஆகியவற்றின் விலைகள் (5.47 சதவீதம்), கனிமங்கள் (5.4 சதவீதம்) மற்றும் உணவு சாராப் பொருட்கள் (0.36 சதவீதம்) அதிகரித்தன. டிசம்பரில் உணவுப் பொருட்களின் விலைகள் ( -4.85 சதவீதம்) குறைந்தன.