

கடந்த 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை முந்தைய நிதியாண்டை காட்டிலும் 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2019-2020 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் தனிநபர்களுக்கு ஜனவரி 10-ம் தேதியும் நிறுவ னங்களுக்கு பிப்ரவரி 15-ம்தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனி நபர்களுக்கான கெடு தேதி முடிவடைந்த நிலையில், ஜனவரி 10 வரை 5.95 கோடி பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட சுமார் 30 லட்சம் அல்லது 5 சதவீதம் அதிகமாகும். அதாவது 2018-2019 நிதியாண்டில் 5.67 கோடி பேர் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் தனிநபர் வருமான வரி கணக்குத் தாக்கல் குறைந்துள்ளதாகவும், நிறுவனங்களின் வருமான வரி கணக்கு தாக்கல் உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும்தனிநபர்கள் தாக்கல் செய்யும் ஐடிஆர்1 படிவம் 2.99 கோடிஅளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு 3.11 கோடியாக இருந்தது.