Published : 09 Oct 2015 09:35 AM
Last Updated : 09 Oct 2015 09:35 AM

வணிக நூலகம்: வாழ்க்கை பாடங்கள்!

வெற்றி ஒன்றே வேத மந்திரம் என்ற எண்ணம் நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்வரை நாமும் அதற்கான செயல்பாட்டோடு அந்த வெற்றியினை நோக்கி அனுதினமும் ஓடிக்கொண்டிருக்கிறோம். நமது அன்றாட செயல்பாடுகளின் முக்கிய நோக்கமே, அவரவருக்கான இலக்கினை எப்படியாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்பதே.

சரி, இந்த வாழ்க்கை வெற்றியைப் பெறுவதற்கு நமது அன்றாட செயல்பாடுகள் மட்டும் போதுமானதா? கண்டிப்பாக இல்லை. வெற்றிபெறவும், அதனை மேலும் மேம்படுத்திக்கொள்ளவும், அதற்கான சில வழிமுறைகளை அறிந்துக்கொள்வதும், அவற்றைப் பின்பற்றுவதும் மிகவும் அவசியம் என்கிறார் “52 லெசன்ஸ் ஃபார் லைப்” என்ற இந்த புத்தகத்தின் ஆசிரியர் நெப்போலியன் ஹில்.

அடிப்படை வரையறைகள்!

ஒரு கட்டிடத்தின் ஒட்டுமொத்த பலமும் அதன் அடித்தளத்தை சார்ந்தே அமைந்திருப்பதை போல, நமது இலக்கிற்கான செயல்பாடுகள் அனைத்தும் நாம் மேற்கொள்ளும் ஆரம்பகட்ட வரையறைகளைப் பொருத்தே அமையும். ஒரு பணியின் நல்ல தொடக்கம் என்பது அதன் பாதி வெற்றிக்கு சமம் என்பதை அறிந்திருக்கின்றோம் அல்லவா!. அதுபோலவே, இந்த வரையறைகள் நமது செயல்பாட்டினை தொய்வில்லாமல் தொடரவும், எளிதில் இலக்கினை அடையவும் பெரிதும் உதவுவதாக சொல்கிறார் ஆசிரியர்.

ஆக, அந்த அடித்தள வரையறைகள் என்ன என்பதை பாப்போம். முதலில் நமக்கு என்ன தேவை? நமது இலக்கு எது? என்பதை மிகத் தெளிவாக நம் மனதில் பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும். இலக்கு இல்லாத பயணம், துடுப்பு இல்லாத படகினைப் போன்றது. அடுத்ததாக, எடுத்துக்கொண்ட இலக்கினை என்னால் செய்ய முடியும் என்ற எண்ணத்தை நம் மனதில் ஆழப்பதிய வேண்டும். அதற்குபிறகு, செயல்பாட்டு திட்டங்களை தெளிவாக அமைத்துக்கொள்ள வேண்டும். இலக்கினை அடைய தேவையான திட்டங்களை அடுத்தடுத்த பணிகளுக்கு வரிசையாக அமைத்துக்கொள்ள வேண்டும். இவை நமது செயல்பாட்டில் ஏற்படும் தேவையற்ற நேர விரயத்தை தடுக்கும்.

அடுத்ததாக, ஒரு நேரத்தில் ஒரே செயல்பாட்டு திட்டத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். இது, ஒரு திட்டத்தின் வெற்றி அதற்கடுத்த செயல்பாட்டினை எளிமையாக்க துணை நிற்கும். அடுத்து, நமது செயல்பாடுகளில் மற்றவர்களின் பங்களிப்பினையும் அதிகளவில் பெற வேண்டியது அவசியமான ஒன்று. இதற்கு, நமது செயல்பாடும் அணுகுமுறையும் அவர்களை கவரும் அளவிற்கு வலிமையானதாக இருக்க வேண்டும். மற்றவர்களின் மீதான நமது எண்ணமும் செயலுமே, அவர்களை தானாக நமது செயல்பாட்டிற்கு அழைத்துக்கொண்டு வரும். இதன்மூலம் அவர்களின் உதவி, நமது திட்டத்தை விரைவாக செயல்படுத்தி வெற்றிபெற உதவும்.

கற்றுக்கொள்ளுங்கள்!

நமக்கு ஏற்படும் தோல்விகளில் இருந்தும், நாம் செய்யும் தவறுகளில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. ஒவ்வொரு தோல்வியிலும் அதற்கு நிகரான வெற்றிக்கு தேவையான விதை இருக்கின்றது என்கிறார் ஆசிரியர். அந்த விதையினை சரியான முறையில் பயன்படுத்தும்போது, தோல்வி யிலிருந்து மீண்டு நமக்கான வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்பதே ஆசிரியரின் கருத்து.

எதிர்மறை எண்ணங்கள்!

நமது வாழ்க்கை ஒரு தோட்டத்தினைப் போன்றது. நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுவடை செய்ய முடியும் அல்லவா!. அதுபோலவே நல்ல எண்ணங்களை நமது மனதில் விதைக்கும்போது, நமது செயல்பாடும் நல்லவிதமாக அமைந்து வெற்றியினை நோக்கி செல்லும். மாறாக, நமது மன தோட்டத்தில் எதிர்மறை விதைகளை விதைக்கும்போது, அவை நமது வெற்றி பயிர்களுக்கிடையே தேவையற்ற களைகளாக உருவெடுத்து, இறுதியில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை பெருமளவில் தடுத்துவிடும். ஆக, ஒரு தோட்டக்காரனைப்போல நாமும் நமது மன தோட்டத்திலிருந்து எதிர்மறையான களைகளை ஆரம்ப நிலையிலேயே நீக்கிவிட வேண்டியது வெற்றிபெற தேவையான மிக முக்கியமான செயல்பாடாகின்றது.

மறப்போம் மன்னிப்போம்!

உண்மையில், மற்றவர்கள் நமக்கு செய்த தீங்கினை மறப்பதோ அல்லது மன்னிப்பதோ அனைவருக்கும் மிக கடினமான ஒன்றுதான். ஆனால் இது நமது வாழ்க்கையின் வெற்றிக்கு மிக அவசியமான ஒன்று என்கிறார் ஆசிரியர். மேலும், மன்னிக்கின்ற மனப்பாங்கினை கொண்டிருப்பது நமது மனதின் நேர்மறையான அணுகுமுறையினை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள தேவையான முதன்மை செயல்பாடு என்றும் தெளிவுபடுத்துகிறார். வெறுப்பும் கோபமும் கத்தியின் இரண்டு முனைகளைப் போன்றது. சில நேரங்களில் இது பாதிக்கப்பட்டவரை மட்டுமல்லாமல், இருதரப்பினரையும் துன்பமடைய செய்துவிடும் என்பதே உண்மை.

புதிதாய் தொடங்குங்கள்!

ஒவ்வொரு செயலையும் புதியதாய் எண்ணி செயல்பட தொடங்குங்கள். எதையுமே புதியதாய் மறுபடியும் ஆரம்பிக்க இப்பொழுது ஒன்றும் பெரிதாக கால தாமதம் ஆகிவிட வில்லை என்ற சிந்தனையை மனதில் வளர்த்துக்கொள்ளுங்கள். பிறந்ததிலிருந்து நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம், இருந்தாலும் நமது அடுத்தடுத்த ஒவ்வொரு சுவாசத்தையும் புதியதாகவே ஆரம்பிக்கின்றோம் அல்லவா!. இலக்கை நோக்கிய தொடர்ச்சியான செயல்பாடாக இருந்தாலும், அந்த செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் இன்று புதியதாய் என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து செயல்படுங்கள்.

வெற்றிக்கான ஒரு திட்டத்தை உருவாக்கி, அதன் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி சென்று கொண்டிருக்கிறோம். பல்வேறு மாறுபட்ட சூழ்நிலைகளில் அதில் ஏற்படும் தவறுகளையும், நம்மால் இழக்கப்பட்ட வாய்ப்புகளையும் எண்ணி, தொடர்ந்து அவற்றை நம் மனதில் சேர்த்து வைத்துக்கொள்ளக்கூடாது. இந்த செயல் நமது செயல்பாட்டினை பின்னோக்கி கொண்டுசென்றுவிடும் என எச்சரிக்கிறார் ஆசிரியர்.

நமது மனதுக்கு நாமே எஜமானன், தவறுகளை மறப்பதற்கும் மற்றும் புதியவற்றை தொடங்குவதற்கும் நாம் வெளிப்புற வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க தேவையில்லை. மாறாக அனைத்தும் நம் வசமே உள்ளது என்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். நமக்கு பின்னால் உள்ள தவறுகளை மறப்பதற்கான கதவுகளை மூடும்போது மட்டுமே, நமக்கு முன்னாள் உள்ள வெற்றிக்கான கதவுகள் திறந்திருப்பதை உணர முடியும்.

பயத்தை வெல்லுங்கள்!

பயம் என்பது நமது விருப்பு வெறுப்புகளில் பெருமளவு செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு வலிமையான உணர்வாகும். மேலும், இந்த பயமே நமது வெற்றிக்கான செயல்பட்டை முழுவதுமாக சீர்குலைக்க கூடிய விஷயமாக இருக்கின்றது. பயத்துடன் செய்யப்படும் ஒரு செயல், ஒருபோதும் உண்மையானதாகவோ அல்லது நம்பிக்கையானதாகவோ இருக்காது. தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் நமது கால்களை, பயமானது பின்னோக்கி இழுக்கவே செய்யும்.

நமக்கு ஏற்படும் அடிப்படை அச்சங்களான ஏழ்மை, நம் மீதான விமர்சனங்கள், உடல் நல தொய்வு, உறவுகளில் ஏற்படும் இழப்பு, முதுமை, நமக்கான சுதந்திரம் பறிக்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றை நமது செயல்பாடுகளின் வாயிலாக கட்டுப்படுத்தி, அவற்றை வெற்றிகொள்ள வேண்டும். இந்த அச்சங்களுக்கு பெரும்பாலும் நமது மனமும், மனதின் மாற்றமுமே தீர்வாக இருக்கின்றது. இந்த வாழ்க்கை பாடங்களை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், அவற்றை நமது திட்டங்களிலும் அதற்கான செயல்பாடுகளிலும் பிரதி பலிக்கும் போது நமக்கான இலக்கினை எளிதில் அடைய முடியும்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x