Published : 12 Jan 2021 05:25 PM
Last Updated : 12 Jan 2021 05:25 PM

பிஎஸ்என்எல் புத்தாக்கத் திட்டம்; ஓராண்டிற்குள் வருவாய் அதிகரிப்பு

புதுடெல்லி

புத்தாக்கத் திட்டத்தின் ஒரு வருடத்திற்குள், அரசு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன் தொகைக்கு முன்பான வருவாயில் (எபிட்டா) வளர்ச்சியை எட்டியுள்ளன.

பிஎஸ்என்எல்-லைப் பொருத்தவரை, செப்டம்பர் 2019 உடன் முடிந்த அரையாண்டில் மைனஸ் 3596 கோடி ரூபாயாக இருந்த எபிட்டா, தற்போது நேர்மறையில் ரூபாய் 602 கோடியாக உள்ளது. எம்டிஎன்எல்-லைப் பொருத்தவரை, செப்டம்பர் 2019 உடன் முடிந்த அரையாண்டில் மைனஸ் 549 கோடி ரூபாயாக இருந்த எபிட்டா, தற்போது நேர்மறையில் ரூபாய் 276 கோடியாக உள்ளது.

தொலைத்தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களின் படி, 2019-20 உடன் ஒப்பிடும்போது, இரு நிறுவனங்களும் தங்களது நஷ்டத்தை 50 சதவீதம் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாமாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. பிஎஸ்என்எல்-லில் சுமார் 50 சதவீத பணியாளர்களும், எம்டிஎன்எல்-லில் சுமார் 75 சதவீத பணியாளர்களும் குறைக்கப் பட்டுள்ளனர். பிஎஸ்என்எல்-லால் தனது வருவாயை தக்க வைத்துக்கொண்டு இதர செலவுகளைக் குறைக்க முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்திரங்களின் மூலம் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்-லும் வெற்றிகரமாக நிதியைத் திரட்டி உள்ளன. எம்டிஎன்எல்-லின் சமீபத்திய பத்திர வெளியீடு, மூன்று முறைக்கு அதிகமாகவும், பிஎஸ்என்எல்-லின் சமீபத்திய பத்திர வெளியீடு இரண்டு முறைக்கு அதிகமாகவும் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய மற்றும் முக்கியமில்லாத சொத்துக்களின் மூலம் 2019-20-ஆம் ஆண்டில் ரூபாய் 1830 கோடியை எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் திரட்டி உள்ளதாக தொலைதொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் இது ரூபாய் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபம் முறையின் மூலம் ஏலம் இடுவதற்காக ஆறு சொத்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x