

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருந்து வரும் நிலையில் நேற்று புதிய உச்சத்தை எட்டி உள்ளன. அதிகமான அந்நிய முதலீடு மற்றும் ஐடி பங்குகளின் சிறப்பான ஏற்றம் பங்குச் சந்தைகள் இந்தப் புதிய உச்சத்தை எட்ட உதவியுள்ளன.
சென்செக்ஸ் 487 புள்ளிகள் உயர்ந்து 49,269 என்ற நிலையில் வர்த்தகமானது. நிஃப்டி 138 புள்ளிகள் உயர்ந்து 14,485 என்ற நிலையில் வர்த்தகமானது. பிஎஸ்இ பங்குகளில் ஹெச்சிஎல் டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ, மாருதி மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை 5.93 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. என்எஸ்இ தளத்தில் உப குறியீடுகளான நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ ஆகியவை சிறப்பாக ஏற்றம் கண்டு 3.31 சதவீதம் வரை உயர்ந்தன.
இதற்கு தொடர்ந்து அதிகரித்து வரும் அந்நிய முதலீடு முக்கிய காரணம். கடந்த வெள்ளிக்கிழமை மட்டுமே ரூ.6029.83 கோடி அந்நிய முதலீடு இந்தியப் பங்குச் சந்தைகளில் செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டு வரும் பொருளாதாரம், தடுப்பு மருந்து விநியோகம் ஆகியவை பங்குச் சந்தை மீது நம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளது. கூடவே நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. டிசிஎஸ், டிமார்ட் எதிர்பார்ப்பை விட நல்ல வருவாய் வளர்ச்சி கண்டு சந்தையை உற்சாகப்படுத்தி உள்ளது என்று ஐடிபிஐ கேபிடல் ஆராய்ச்சி பிரிவு தலைவர் ஏ.கே.பிரபாகர் கூறியுள்ளார்.