

இந்தியாவின் 7-வது வர்த்தகக் கொள்கை மீளாய்வு, இம்மாதம் 6-ந் தேதியன்று உலக வர்த்தக நிறுவனத்தில் தொடங்கியது.
உறுப்பு நாடுகளின் வர்த்தகக் கொள்கைகளை விரிவாக மீளாய்வு செய்வது என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் கண்காணிப்புப் பணியில் முக்கியமான முறையாகும். இதற்கு முன்பு இந்தியாவின் வர்த்தகக் கொள்கை மீளாய்வு 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
இந்திய வர்த்தகச் செயலர் டாக்டர் அனுப் வதவன் தலைமையிலான அலுவலகக் குழு இப்பணிக்காக அங்கு சென்றுள்ளது. டாக்டர் அனுப் தனது துவக்க அறிக்கையில், முன்பு கண்டிராத சுகாதார, பொருளாதார நெருக்கடியை உலகம் எதிர்கொள்ளும் இவ்வேளையில் வர்த்தகக் கொள்கை மீளாய்வு நடப்பதாக குறிப்பிட்டார். கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார, பொருளாதார சவால்களை, தற்சார்பு இந்தியா முன்முயற்சி உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலமாக இந்தியா சிறப்பாக கையாண்டதை அவர் எடுத்துரைத்தார்.
அனைவருக்கும் சமமாகவும், வாங்கக் கூடிய விலையிலும் கோவிட் தடுப்பு மருந்துகளும், சிகிச்சைகளும் கிடைக்கச் செய்வதில் இந்தியாவின் உறுதியை எடுத்துரைத்த டாக்டர் அனுப் வதவன், இந்த விஷயத்தில் பன்முக வர்த்தக முறை முக்கிய பங்காற்ற முடியும் என்று கோடிட்டுக் காட்டினார். கோவிட்-19 பெருந்தொற்று சூழலில், புதிய சிகிச்சை முறைகளையும், தடுப்பூசிகளையும் குறித்த காலத்திற்குள் சிக்கன விலையில் உற்பத்தி செய்வதற்காகவும், குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதற்காகவும், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வர்த்தகக் கூறுகள் உடன்படிக்கையின் சில அம்சங்களை தற்காலிகமாக விலக்கிக் கொள்வது; உணவுப் பாதுகாப்புக்காக பொது கையிருப்புக்கான நிரந்தரத் தீர்வு; மருத்துவ நிபுணர்கள் பிற நாடுகளுக்கு எளிதாக செல்வது உள்ளிட்ட மருத்துவ சேவைகள் தொடர்பான பன்னோக்கு நடவடிக்கை ஆகியவை உட்பட பல்வேறு குறைந்த கால சிறப்பு நடவடிக்கைகளை, உலக வர்த்தக நிறுவனத்திடம் இந்தியா அறிவுறுத்தியது.
மீளாய்வின் போது, உலக வர்த்தக நிறுவனத்தின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா மேற்கொண்ட முக்கிய வர்த்தக, பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிட்டு, இந்தியாவின் 7.4 விழுக்காடு என்ற வலுவான பொருளாதார வளர்ச்சியையும், சீர்திருத்த முயற்சிகளையும் ஆக்கப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது.
வலுவான பொருளாதார வளர்ச்சியால், சமுதாய-பொருளாதார அலகுகளான தனிநபர் வருவாய், ஆயுட்காலம் அதிகரிப்பது ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் தளர்வு, வர்த்தக வசதி உடன்படிக்கைக்கு ஒப்புதல், வர்த்தகத்திற்கு சாதகமான இந்தியாவின் பல்வேறு நடவடிக்கைகள் ஆகியவற்றை அறிக்கை பாராட்டியுள்ளது.
50-க்கும் அதிகமான, உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் வெளியிட்ட பல்வேறு அறிக்கைகளில், எளிதாக வர்த்தகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், வலுவான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை குறிப்பிட்டு இந்தியாவைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.