Last Updated : 21 Oct, 2015 10:03 AM

 

Published : 21 Oct 2015 10:03 AM
Last Updated : 21 Oct 2015 10:03 AM

பருப்பு விலை உயர்வுக்கு பதுக்கல் காரணமா?

பண்டிகை காலம் நெருங்கி கொண்டிருக் கிறது. இப்போதுதான் மக்கள் பொருட் களை வாங்க தொடங்கியிருக்கிறார்கள். அதற்குள் அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை பருப்பு விலையேற்றம் கொடுத் திருக்கிறது. கடந்த வருடம் கிலோ ரூ.80க்கு கிடைத்த துவரம் பருப்பு நேற்றைய நிலவரப் படி ரூ.215க்கு விற்கப்படுகிறது. சில இடங்களில் இன்னும் அதிகமாக விலையேற்றி விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெங்காய விலையேற்றமும் தற்போது பருப்பு விலையேற்றமும் மக்களை மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள பருப்பு விலையேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தியாவில் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு பருப்பு சாகுபடி செய்யப்படுகிறது. நமது நாட்டிற்கு ஒரு வருடத்துக்கு சராசரியாக 2.10 கோடி டன் பருப்பு தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு பருவ மழைப் பற்றாக்குறையால் பருப்பு உற்பத்தி 1.7 கோடி டன் அளவுக்கே உற்பத்தி இருக்கும் என மத்திய வேளாண்துறை கணக்கிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பருப்பை இறக்குமதி செய்வதன் மூலம் நமது தேவையை நிறைவு செய்கிறோம். ஆனால் இந்த வருடம் அப்படி எந்த முடிவையும் மத்திய அரசு முன்கூட்டியே எடுக்காததுதான் பருப்பு விலையேற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட வணிகர்கள் பலர் பதுக்கலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களும் இந்த தட்டுப்பாட்டை பதுக்கலுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன.

இது குறித்து தொழில் ஆலோசகர் ஷ்யாம் சேகர் கூறுகையில், “பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிற போது விலையேற்றம் தவிர்க்க முடியாதது. இதற்கு ஊக பேர வணிகர்களை குறை சொல்வது நியாயமில்லை. எட்டு வாரங்களுக்கு முன்பு வெங்காயம் விலை கிலோ ரூ.80 க்கு விற்கப்பட்டது, தற்போது கிலோ ரூ.45க்கு விற்கப்படுகிறது. அதேபோல் பருப்பு விலையேற்றமும் தாற்காலிகமானது மக்கள் பீதியடைய தேவையில்லை” என்றார்.

மேலும் இந்தியாவில் பருப்பு சாகுபடி குறைந்து கொண்டே வருவதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள். பருப்புக்கு தரப்படும் குறைந்தபட்ச ஆதார விலை மற்ற பயிர்களான கோதுமை, கரும்புக்கு வழங்கப்படுவதை விட குறைவு. மேலும் பயிரிட்டு ஏற்படும் நஷ்டத்திற்கு முறையான இழப்பீடு இல்லை என்பதும் விவசாயிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதுபற்றி பொருளாதார அறிஞர் ஜோதி சிவஞானத்திடம் கேட்டபோது, “மத்திய அரசு நீர்ப் பாசனத்திற்கு 1 சதவீதம் அளவுக்குதான் நிதி ஒதுக்குகிறது. பருவமழை அளவும் குறைவாக பெய்துள்ளது. அதனால்தான் பயிர் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. தேவையை விட உற்பத்தி குறைவாக இருக்கிறது. உற்பத்தி அளவு குறையும் என்று தெரிந்த பிறகும் மத்திய அரசு இறக்குமதியில் போதிய கவனம் செலுத்தவில்லை. மேலும் ஊக பேர வணிகர்களை அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. பதுக்கலை கட்டுப்படுத்தினால் மட்டுமே தற்போதுள்ள விலையேற்றத்தை குறைக்க முடியும்.மேலும் பதுக்கலை கட்டுப்படுத்தினாலும் விலையேற்றம் குறைய மூன்று மாத காலம் ஆகும்” என்றார்.

``உற்பத்தி குறைவு என்பதை தெரிந்து கொண்ட மத்திய அரசு ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே பருப்பை இறக்குமதி செய்திருக்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் உலக அளவில் பருப்பு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்போது இறக்குமதி செய்திருப்பது காலம் கடந்த நடவடிக்கை. இந்த விலையேற்றத்தால் வணிகர்களின் வியாபாரம் 30 சதவீதம் குறைந்திருக்கிறது. இப்போது கிலோ ரூ.215 க்கு விற்கும் பருப்பு விலை மேலும் அதிகரிக்காமல் இருந்தாலே போதுமானது” என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள விலையே நீடிக்கும் என்றால் பண்டிகை காலம் நெருங்க நெருங்க விலை இன்னும் அதிகரிக்ககூடும் என்கிற பயமும் மக்களிடையே உள்ளது. மத்திய அரசு தற்போது 5,000 மெட்ரிக் டன் பருப்பை இறக்குமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு நவம்பர் 1ஆம் தேதி முதல் மலிவு விலையாக கிலோ ரூ.110க்கு விற்கப்படும் என்று அறிவித்துள்ளது. அந்த அறிவிப்புகள் வெளிச்சந்தையில் பருப்பு விலை ஏற்றத்தை ஓரளவு கட்டுப்படுத்தும். ஆனால் பதுக்கலை கட்டுப்படுத்தினால் மட்டுமே பருப்பு விலை கட்டுக்குள் இருக்கும் என்பதுதான் தற்போதைய சந்தை நிலைமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x