கோல் இந்தியா நிறுவன பங்கு விலக்கல் மீண்டும் ஒத்திவைப்பு

கோல் இந்தியா நிறுவன பங்கு விலக்கல் மீண்டும் ஒத்திவைப்பு
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா பங்கு விலக்கல் மூன்றாவது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விலக்கிகொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த பங்கு விலக்கல் மூலம் சுமார் 21,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைக்கும்.

இந்த பங்கு விலக்கலை நிர்வாகம் செய்வதற்கான வர்த்தக வங்கியை மத்திய அரசு இன்னும் நியமிக்கவில்லை. அதற்கான காலக்கெடுவைத்தான் மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. இந்த பங்குவிலக்கலை நிர்வாகம் செய்ய எந்த வெளிநாட்டு வர்த்தக வங்கியும் முன்வரவில்லை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொள்கைகளை அறிவிப்பதாக கோல் இந்தியா நிறுவனம் 2013-ம் ஆண்டு உறுதியளித்தது. ஆனால் இதுவரை அந்த கொள்கை முடிவுகளை கோல் இந்தியா அறிவிக்கவில்லை. இது வெளிநாட்டு வங்கியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பிரச்சினையைத் தீர்க்க பங்குவிலக்கல் துறை முன்வந்திருக்கிறது. வர்த்தக வங்கியாளர்களும் கோல் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகளும் சந்தித்து கொள்ள ஏற்பாடு செய்து வருகிறது.

கோல் இந்தியா பங்கு இப்போது மிகவும் குறைந்த விலையில் விற்பனையாகி வருகிறது. அதனால் தற்போதைய சூழலில் இந்த பங்கினை எளிதாக விற்கமுடியும் என்று பங்கு விலக்கல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனை செயல்படுத்துவதற்கான மெர்ச்சன்ட் வங்கிகள் விண்ணப்பிக்கும் காலத்தை நவம்பர் 10-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்திருக்கிறது.

கோல் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசு வசம் 78.65 சதவீத பங்குகள் இருக்கின்றன. தற்போதைய சந்தை விலையில் 10 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் சுமார் 21,000 கோடி ரூபாய் திரட்ட முடியும். கடந்த ஜனவரி மாதத்தில் இந்த நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் மூலம் 22,557 கோடி ரூபாயை மத்திய அரசு திரட்டியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in