

ரியல் எஸ்டேட் தொழிலில் கடந்த 33 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் ஜெயின் ஹவுசிங் நிறுவனத்தில் இரண்டு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சுமார் ரூ.175 கோடியை முதலீடு செய்துள்ளன. இந்த முதலீடு மூலம் இந்நிறுவனத்துக்கு உள்ள கடன் சுமையைக் குறைக்க உதவும்.
ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆகியவை ஜெயின் ஹவுசிங்கில் முதலீடு செய்துள்ளன.
ஜெயின் ஹவுசிங் நிறுவனம் தென் மாநிலங்களில் இதுவரையில் 185 திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளது. தற்போது இந்நிறுவனம் 20 திட்டப்பணிகளை சென்னை, ஹைதராபாத், கோயம்புத்தூர், கொச்சி, பெங்களூரூ, திருப்பூர் ஆகிய நகரங்களில் மேற்கொண்டு வருகிறது. இவற்றின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். இந்நிறுவனம் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், வளாகங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டி வருகிறது.
இந்நிறுவனத்தில் இதற்கு முன்பு சிங்கப்பூரைச் சேர்ந்த குளோபல் சாவரின் வெல்த் பண்ட் நிறுவனம், ஜான்டர் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ. 5,150 கோடி வரை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.