

மத்தியஅரசுக்கு கை கொடுத்த ஜிஎஸ்டி: 2020ம் ஆண்டில் ரூ.10.93 லட்சம் கோடி வசூல்
கடந்த 2020ம் ஆண்டில் ஜி.எஸ்.டி வாயிலாக மொத்தம் ரூ.10.93 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்தபின் மத்திய அரசுக்கு சீராக வருவாய் வந்த நிலையில், கரோனா வைரஸ் பரவலுக்குப்பின் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலும் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஜி.எஸ்.டி. வாயிலான வருவாய் குறைந்தது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் மிகவும் குறைந்தது.
இருப்பினும் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் ஜி.எஸ்.டி. வருவாயாக மொத்தம் ரூ.10.93 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1.15 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரி வசூல் நடைமுறைக்குவந்ததில் இருந்து அதிகபட்ச வரி வசூல் என்பது கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.13 லட்சம் கோடி கிடைத்ததுதான். அதன்பின் இந்த அளவு வரிவசூலைத் எப்போதும் தொட்டதில்லை.
ஆனால்,2020 டிசம்பர் மாதம் இதுவரை இல்லாத வகையில் ரூ.1.15 லட்சம் கோடி வரிவசூலானது. 2020, டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரிவருவாய் வசூல் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 174 கோடியாகும். கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபின் கிடைத்த அதிகபட்ச வசூல் இதுவாகும்
2020ம் ஆண்டின் ஜி.எஸ்.டி. வசூல்
மொத்தம்- ரூ.10,93,644 கோடி