

2020-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்து ரூ.1.15 லட்சம் கோடியைக் கடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல் நடைமுறைக்குவந்ததில் இருந்து அதிகபட்ச வரி வசூல் என்பது கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.13 லட்சம் கோடி கிடைத்ததுதான்.
அதன்பின் இந்த அளவு வரிவசூலைத் எப்போதும் தொட்டதில்லை. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் இதுவரை இல்லாத வகையில் ரூ.1.15 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.
பண்டிகைக்கால தேவை, விற்பனை, பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்பிவருவது ஆகியவற்றின் பிரதிபலிப்பாக ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது.
2020, டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரிவருவாய் வசூல் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 174 கோடியாகும். கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபின் கிடைத்த அதிகபட்ச வசூல் இதுவாகும்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கடந்த 21 மாதங்களில் ஜிஎஸ்டி வரிவசூலில் உச்சபட்சமாக 2020,டிசம்பர் மாதத்தில் வரிவருவாய் உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்புக்குப்பின், பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது என்பதைக் காட்டுகிறது.
ஜிஎஸ்டி வரிஏய்ப்பாளர்கள், போலி பில்கள் தாக்கல் செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் வரிவசூல் உயர்ந்துள்ளது.
2020, நவம்பருக்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன்-3பி டிசம்பர் மாதத்தில் 87 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். இறக்குமதி பொருட்கள் மீதான வரிவருவாய் 27 சதவீதம் உயர்ந்துள்ளது, உள்நாட்டளவில் பொருட்கள் பரிமாற்றத்தில் வரிவருவாய் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.03 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2020 டிசம்பரில் ரூ.1.15 லட்சம் கோடியாக 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
மத்திய ஜிஎஸ்டிவரி ரூ.21,365 கோடியாகவும, மாநில ஜிஎஸ்டி வரி ரூ.27,804 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.57,426 கோடியாகவும், செஸ் ரூ.8,579 கோடியாகவும் இருக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.