Published : 31 Dec 2020 09:23 AM
Last Updated : 31 Dec 2020 09:23 AM

ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆகாஷ் ஏவுகணையின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு பாதுகாப்புத் தளவாடங்களையும் ஏவுகணைகளையும் இந்தியா உருவாக்கி வருகிறது. 96% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் நாட்டின் மிக முக்கிய ஏவுகணையாகும்.

தரையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவு வரை வானத்தில் சென்று தாக்கும் இந்த ஏவுகணை கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையிலும், 2015-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திலும் சேர்க்கப்பட்டது.

இந்த ஏவுகணை பயன்பாட்டைத் தொடர்ந்து, பல்வேறு நட்பு நாடுகள் ஆகாஷ் ஏவுகணை மீதான தங்கள் விருப்பத்தை சர்வதேசக் கண்காட்சி, பாதுகாப்புக் கண்காட்சி, ஏரோ இந்தியா போன்ற நிகழ்ச்சிகளின் போது வெளிப்படுத்தி வருகின்றன. அமைச்சரவையின் இந்த ஒப்புதலின்‌ வாயிலாக இந்திய உற்பத்தியாளர்கள் பிற நாடுகளின் தகவல்/ திட்ட முன்மொழிவுகளை கோரும் ஆவணங்களில் பங்கேற்க முடியும்.

பாதுகாப்புத் துறையில் இதுவரை கூறுகள்/ பாகங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. முழுமையான தளவாடங்கள் ஏற்றுமதி மிகவும் குறைவு. அமைச்சரவையின் இந்த முன்முயற்சி நாட்டின் பாதுகாப்புத் தளவாடங்களை உலகளவில் போட்டியிடும் வகையில் அவற்றை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும்.

ஏற்றுமதி செய்யப்படும் ஆகாஷ் ஏவுகணையின் தன்மை இந்திய பாதுகாப்புப் படையில் உபயோகிக்கும் ஏவுகணையை விட வேறுபட்டதாக இருக்கும்.

ஆகாஷைத் தவிர கடற்கரைக் கண்காணிப்பு கருவி, ரேடார் மற்றும் வான்வெளி தளங்கள் போன்றவற்றிலும் பிற நாடுகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன. இதுபோன்ற தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெரும் ராணுவ தளவாடங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து இந்த குழு ஒப்புதல் வழங்கும். இரு நாடுகளுக்கிடையேயான பல்வேறு வாய்ப்புகளையும் இந்த குழு ஆய்வு செய்யும்.

பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக பாதுகாப்பு ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டவும், அந்நிய நட்பு நாடுகளுடனான கேந்திர உறவுமுறையை மேம்படுத்தவும் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x