Last Updated : 30 Dec, 2020 07:25 PM

 

Published : 30 Dec 2020 07:25 PM
Last Updated : 30 Dec 2020 07:25 PM

2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்னைத் தாக்கல் செய்ய காலக்கெடு 3-வது முறையாக நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்னைத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகவும், தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காலக்கெடு 2021, ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் வழக்கமாக ஜூலை 31-ம் தேதி முடிந்துவிடும். ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக காலக்கெடு இரு முறை நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31-ம் நாளை கடைசித் தேதியாக வருமான வரித்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், நிறுவனங்கள், தனி நபர்களின் கணக்குகள் ஆகியவை கணக்குத் தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்யப்படுவதாக இருந்தால், அவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலம் 2021, பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட காலக்கெடு 2021, ஜனவரி 31-ம் தேதியாக இருந்தது. இது கூடுதலாக 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 28-ம் தேதி வரை 2019-20ஆம் நிதியாண்டுக்கான ரிட்டர்ன் 4.54 கோடி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2018-19ஆம் நிதியாண்டோடு ஒப்பிடும்போது குறைவாகும், 2018-19ஆம் நிதியாண்டில் 4.77 கோடி வரிமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதேபோல, விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலக்கெடுவும் 2021, ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2019-20ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலக்கெடுவும் 2021, பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

விதிமுறையின்படி, 60 வயதுக்கும் குறைவானவர்கள் ஆண்டுக்கு, ரூ.2.50 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ஊதியம் பெறுவோர் கண்டிப்பாக ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு அதாவது 60 வயது முதல் 80 வயதுள்ளவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமாக இருந்தால் அவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு வருமான வரி ரிட்டர்னைத் தாமதமாகச் செலுத்துவோருக்கான அபராதத்தை இரு மடங்காக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு முன் ரூ.5 ஆயிரம் இருந்த நிலையில் அதை ரூ.10 ஆயிரமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. மேலும், தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்தால் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும்.

இதற்குரிய அறிவுறுத்தல்களை மத்திய வருமான வரித்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x