

வாட்ஸ்அப், ஸ்கைப், ஹைக் உள்ளிட்ட செயலி சேவை நிறுவ னங்களை முறைப்படுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவ னங்கள் கூறிவந்த நிலையில் எங்களை முறைப்படுத்த வேண்டியதில்லை என்று ஹைக் நிறுவ னத்தின் தலைவர் கவின் பார்தி மிட்டல் தெரிவித்தார். இவர் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டலின் மகன்.
அவரது செயலியின் புதிய சேவைகள் குறித்த அறிமுக நிகழ்ச்சியில் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
எங்களை போன்ற நிறுவனங்கள் செயல்படுவது தொலைதொடர்பு நிறுவனங்களுக்குதான் நல்லது. எங்களது செயலியை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம். இணையத்தை அதிகம் பயன் படுத்துவதினால் தொலை தொடர்பு நிறுவனங்களுக்குதான் கூடுதல் வருமானம். நாங்கள் சந்தையில் இல்லை என்றால் மக்கள் இணையத்தை பயன்படுத்த மாட்டார்கள், இது டெலிகாம் நிறுவனங்களுக்கு இழப்பு என்றார்.
கடந்த ஜூலை மாதத்தில் தொலைத் தொடர்புத்துறை, இது போன்ற நிறுவனங்களை ஒழுங்கு முறைப்படுத்த குழு ஒன்றை பரிந்துரை செய்தது. அதில் செயலி நிறுவனங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உள்ள விதி முறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
வருமானம் திரட்ட முடிவு
ஹைக் நிறுவனம் பற்றி கவின் மிட்டல் கூறும் போது, இப்போதைக்கு எங்கள் செயலியை 7 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இன்னும் 12 முதல் 18 மாதங்களில் நாங்கள் வருமானம் ஈட்டத் தொடங்கி விடுவோம். விளம்பரம் உள்ளிட்ட வழிகளில் வருமானம் திரட்ட முடிவு செய்திருக்கிறோம்.
இப்போது 100 மீட்டர் தொலைவுக்குள் இருப்பவர்கள் இணைய வசதி இல்லாமல் எங்கள் செயலியை பயன்படுத்த முடியும். உதாரணத்துக்கு 100 எம்பி தகவல் பத்து வினாடிகளில் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். இப்போது ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தில் மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும். ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் அடுத்த வருடத்தில் இருந்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஹைக் மூலமாக ஒரு மாதத்தில் 2,000 கோடி குறுந்தகவல்கள் அனுப்பப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் சராசரியாக ஒரு வாரத்தில் 140 நிமிடங்கள் ஹைக் செயலியை பயன்படுத்துகிறார் என்றார்.
2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தில் டைகர் குளோபல் மற்றும் பிஎஸ்பி வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் 8.6 கோடி டாலர் முதலீடு செய்திருக்கிறது.