ஸ்கில் இந்தியா; டாடா இணைந்து திறன் வளர்த்தல் பயிற்சி
இந்தியத் திறன் நிறுவனத்தின் முதல் பயிற்சிப் பிரிவை திறன் வளர்த்தல் அமைச்சகமும் , டாடா அமைப்பும் தொடங்கின.
ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் திறன்களை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தனியார் துறை பங்களிப்புடன் ஸ்கில் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கவும், டாடா - இந்தியத் திறன் நிறுவனத்தின் முதல் பிரிவுப் பயிற்சி வகுப்புகள் மும்பையில் தொடங்கப்பட்டன.
மத்தியத் திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் டாக்டர். மகேந்திர நாத் பாண்டே காணொலி மூலம் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். தொழிற்சாலை தானியங்கிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் (திறன்மிகு) உற்பத்தி ஆகியவற்றில் இரண்டு குறுகிய காலப் பயிற்சிகளை முதல் பிரிவு கொண்டிருக்கும்.
இந்திய அரசின் திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் அமைச்சகம், டாட்டா-இந்திய திறன் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. திறன் வளர்த்தல், தொழில்முனைதல் அமைச்சகத்துக்கும் டாட்டா-இந்திய திறன் நிறுவனத்துக்குமிடையே இதற்கான ஒப்பந்தம் 2020 நவம்பர் 11 அன்று கையெழுத்திடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “உலகத்தின் திறன் தலைநகரமாக இந்தியாவை மாற்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் லட்சியத்தை அடைவதை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்,” என்றார்.
மேலும் பேசிய அவர், உலகத்தரம் வாய்ந்த பயிற்சியை டாடா-இந்தியத் திறன் நிறுவனம் வழங்கும் என்று கூறியதோடு, மகாராஷ்டிர அரசுக்கும், டாட்டா குழுமத்துக்கும் தமது நன்றியைத் தெரிவித்தார்.
