

'இந்தியாவில் எரிசக்திக்கான எதிர்காலம்' என்னும் தலைப்பில் ஸ்டான்போர்ட் பழைய மாணவர்கள் குழுவுடன் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார்.
எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கு உகந்த இடம் இந்தியா என்று திரு பிரதான் அவர்களிடையே கூறினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அதிக அளவில் மின்சார நுகர்வு தேவை என்றும், எனவே மின்சாரத்துக்கான தேவை அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
2040-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் எரிசக்தி தேவை ஆண்டுக்கு மூன்று சதவீதம் என்ற அளவில் வளரும் என்று கூறிய திரு பிரதான், எண்ணெய்க்கான தேவை 2035-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் குறையும் என்று கூறினார்.
எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்றவற்றின் முக்கியத்துவம் குறைந்து இயற்கை எரிவாயுவின் பங்கு சர்வதேச அளவில் அதிகரிக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தூய்மையான, பசுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை இந்தியாவுக்கு உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி உறுதி கொண்டிருப்பதாக பிரதான் கூறினார். சுற்றுப்புறச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் இந்தியா உறுதியுடன் செயலாற்றி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.