Published : 29 Jun 2014 01:25 PM
Last Updated : 29 Jun 2014 01:25 PM

வணிக நூலகம்: சந்தைக்கு போகும் வழி - 2

இந்திய குடும்பங்களில் அதிகம் புழங்கும் பொருள் என்ன என்று கடந்த வாரம் கேட்டிருந்தேன். அந்த பொருள் சைக்கிள். 50.5% குடும்பங்களில் சைக்கிள் உள்ளதாம்.

அடுத்து, 34% வீடுகளில் இருப்பது மிக்ஸி, கிரைண்டர் மற்றும் ஃபுட் ப்ராசஸர்கள். அதற்கடுத்து 29.4% வீடுகளில் இருப்பது வி.சி.டி/ டி.வி.டி பிளேயர்கள். அடுத்த இடத்தில் வரும் சொத்து கவனிக்கத்தக்கது. 23.5% வீடுகளுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் உள்ளன. கல்விச் சந்தையின் புள்ளி விவரங்கள் திடுக்கிட வைக்கின்றன. 37% மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கிறார்கள். ஆனால் இதில் தனியார் பங்கு 0.7% மட்டுமே. 16% மாணவர்கள் படிக்கும் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரிகளில் தனியாரின் பங்கு 82%!

அதே போல, பெரிதும் வணிகமயமாக்கப்பட்ட உயர் கல்வி சந்தையின் மிகப்பெரிய பிரச்சினை ஆசிரியர் பற்றாக்குறைதான். நம் தேவையில் பாதிதான் கிடைக்கிறது. ஆசிரியர் தரம் பற்றியெல்லாம் பேசும் நிலையிலேயே நாம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஊடகம் பற்றிய அத்தியாயம் சத்தானதாக இருந்தது. 2011ல் ரூ. 72,800 கோடியில் புழங்கி 2013ல் ரூ. 92,000 கோடிக்கு வளர்ந்துள்ளது. 2017ல் ரூ. 1,66,100 கோடி வியாபாரம் தொடும் என்கிறது கணிப்பு.

பிராந்திய ஊடகங்களின் வளர்ச்சியும், டிஜிட்டல் மயமாக்கலும் சந்தையை விரிவுப்படுத்தும் எனத் தெரிகிறது. தொலைக்காட்சிகள் தான் ஊடகங்களிலேயே லாபம் கொழிப்பவை. ரேடியோ மூன்றாம் கட்ட லைசன்ஸுக்குப் பின் இன்னொரு குதிரைப் பாய்ச்சல் பாயலாம் என்கிறார்கள்.

இந்தி கோலோச்சினாலும், பிராந்திய சேனல்களில் தமிழ்தான் முதலிடம். பின்னர்தான் தெலுங்கும் மராட்டியும். முதலில் பொழுது போக்கு சேனல்கள், பின் திரைப்படச் சேனல்கள், பின்னரே செய்திச் சேனல்கள் என இந்தி மற்றும் பிராந்திய சேனல்களில் காணப்படும் ஒரே போக்கு சிந்திக்க வைக்கிறது. சரி, புள்ளி விவரம் நிறைய பேசியாயிற்று. அது மட்டும் தானா இந்த புத்தகம்? கிட்டத்திட்ட நூறு பக்கங்களுக்கு விற்பனை சார்ந்த பிரமுகர்களின் கட்டுரைகள் பல புதிய செய்திகளையும் சிந்தனைகளையும் நமக்கு அளிக்கின்றன. குறிப்பாக அம்பி பரமேஸ்வரனின் தலைமுறைகள் பற்றிய கட்டுரையையும், அனக் தேசாயின் டிஜிட்டல் மார்க்கெடிங் பற்றிய கட்டுரையையும் சொல்லலாம்.

உங்கள் எல்லா வியாபார முடிவுகளுக்கும் இந்த புத்தகம் ஏதோ ஒரு வகையில் கண்டிப்பாக உதவும். புத்தகத்தை மூடி வைத்து அசை போட்டதில் மனதில் நின்றவை எது என பட்டியல் இட்டேன். அவை இதோ:

* தலைமுறை இடைவெளி சுமார் ஏழு வயது என குறைந்து விட்டது. அதனால் 24 வயது பையனும் 31 வயது அண்ணனும் ஒன்றாக இருப்பது சிரமம்.

* சிறிது சிறிதாக ஏகப்பட்ட பிளவுகள் கொண்ட இந்திய சந்தையில் ஒவ்வொரு பிரிவிற்கும் சிறப்பு பொருட்களும் சந்தைகளும் கொண்டு வரலாம். ஆனால் உயர், மத்திய, கீழ் என விலை சார்ந்த சந்தையாகவே தான் பெரும்பாலான வியாபாரிகள் பார்க்கிறார்கள்.

* இதனால் இழந்த சந்தை மதிப்பு மிக மிக அதிகம். கிளர்ச்சியூட்டும் இளமை முத்திரை உள்ள பொருட்களை எல்லா வயதினரும் வாங்குகிறார்கள். ஹார்லே டேடிட்சன் பைக்கும், ரெட் புல் பானமும் சிறந்த உதாரணங்கள்.

* வாடிக்கையாளர் விசுவாசம் தான் நிறுவனங்களின் ஒரே தாரக மந்திரம். வயதானவர்கள் இளைஞர்களை விட சந்தேகம் கொண்டவர்களாகவும் விசுவாசம் குறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். தொடர்ந்து விசுவாசத்தை வளர்க்க நிறுவனங்கள் இனி அதிக செலவு செய்ய வேண்டும்.

* ஆன்லைன் வர்த்தகம் இனி மொபைலில் நடக்கும். அதனால் கோடிக்கணக்கான தகவல்கள் உருவாகும். இது ஒரு பெரும் சந்தை வாய்ப்பு.

* சமூக வலைதளங்களில் எல்லா பெரும் நிறுவனங்களும் முதலீடுகள் செய்ய ஆரம்பித்தாயிற்று. உங்கள் பாதச் சுவடுகள் சமூக வலைதளங்களில் எவ்வளவு உள்ளன என்பதை வைத்து பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. வியாபாரங்கள் நடக்கின்றன.

* ரயில் டிக்கெட் வாங்குதல், ஸ்கைப்பில் பேச்சு, ஃபேஸ்புக்கில் படங்கள் போடுதல் என வயதானவர்கள் கிட்டத்திட்ட முழுதாய் டிஜிட்டல் உலகிற்கு வந்து விட்டார்கள்.

* மொபைலில் புது ஆப்ஸை டவுன்லோடு செய்தல், லின்கிட்-இன் அக்கவுண்ட், எல்லா பணப்புழக்கமும் போனில் என இருபதுகள் அடுத்தக் கட்டத்தில் இருக்கிறார்கள்.

* இந்தியர்களில் 63% இளைஞர்கள் என்று அவர்களை பிடிக்கும் அவசரத்தில், கையில் பணம் வைத்திருக்கும் முதியவர்கள் மீது சந்தை அதிகம் கவனம் செலுத்தவில்லை.

* டிஜிட்டல் வழி வணிகம் வந்தும் வாடிக்கையாளர் சேவை பெரிதும் முன்னேறவில்லை.

வாடிக்கையாளர் இழப்பு அதிகம் நடப்பது மோசமான வாடிக்கையாளர் சேவையில் தான். “என் டிக்கெட்டில் உணவு புக் ஆகியிருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள்?” என்று விமானப் பணிப்பெண்ணிடம் கேட்டேன். ஒரு செயற்கை சிரிப்புடன் சொன்னாள்: “அதை நீங்கள் கிரவுண்ட் ஸ்டாஃபிடம்தான் கேட்கணும்!” வண்டியை திருப்பச் சொல்லலாமா என்று ஒரு கணம் யோசித்தேன்!

அதேபோல எந்த பெரிய விடுதியில் தங்கினாலும் செக் அவுட் நேரத்தை எவ்வளவு முன்னர் சொன்னாலும் நாம் ரிசப்ஷனில் நின்றதும் தான் அவர்கள் கடமைகளை தொடங்குவர். ஏன் எல்லா வங்கி ஆசாமிகளும் இன்ஷூரன்ஸ் பேர்வழிகளும் பேசும் வார்த்தைகளும் கொடுக்கும் தாள்களும் கடைசி வரை புரிவதில்லை? எல்லா இடங்களிலும் தொழில் நுட்பம் முன்னேறிவிட்டன. ஆனால் அதன் மூலம் கிடைக்கும் தகவல்களும் புரிதல்களும் வாடிக்கையாளர் நலனுக்கு முழுதாகச் செல்வதில்லை. அதை முழுவதுமாக ரசவாதம் செய்து மாற்றத் தெரிந்த வியாபாரிகள் மட்டும்தான் நீண்ட நாட்கள் செழிப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x