

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத போக்குவரத்து வசதியை இந்தியாவில் படிப்படியாக உருவாக்க செயலி மூலம் கார், ஆட்டோ சேவை அளிக்கும் உபெர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக 3 ஆயிரம் பேட்டரிஸ்கூட்டர், ஆட்டோ மற்றும் கார்களை அடுத்த ஆண்டு இயக்க திட்டமிட்டுள்ளது.
வரும் 2040-ம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் மாசில்லாத போக்குவரத்து வசதியை உருவாக்கும் இலக்கை எட்ட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் 1.8 லட்சம் இலவச சவாரி வசதியை மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த சுகாதார பணிகளுக்கு இயக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இத்தகைய சேவைவழங்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் டிரைவர்களுக்கு உதவித் தொகைகளை அளித்ததாக நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிரிவுக்கான தலைவர் பிரப்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கென ஒரு கோடி எண்ணிக்கையிலான சவாரியை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்நிறுவனம் 30 லட்சம் முகக் கவசங்களையும், 2 லட்சம் கிருமி நாசினிகளையும், டிரைவர்களுக்கு 2 லட்சம் கிருமி நாசினிகளையும் இலவசமாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவமனைகள் மற்றும் பார்மசிகளுக்கும் கிளினிக்குகளுக்கும் அத்தியாவசிய சேவையை அளித்துள்ளதாகவும் உபெர் எசென்ஷியல் மூலம் 45 ஆயிரம் சவாரிகள் அளித்துள்ளதாகவும் முன்னணி தன்னார்வ நிறுவனத்துக்கு 50 ஆயிரம் இலவச சவாரிகளை அளித்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ராபின் ஹூட் ஆர்மி, ஹெல்பேஜ் இந்தியா, சைல்ட்லைன் இந்தியா அறக்கட்டளை, பார்வைத் திறன் குறைந்தோருக்கான தேசிய அமைப்பு உள்ளிட்டவையும் இதில் அடங்கும் என்று பிரப்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.