

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் பால்மர் ட்விட்டர் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளார். இந்த கையகப்படுத்துதல் தொடர்பாக வியாழக்கிழமை மாலை அவர் ட்வீட் செய்துள்ளார். இதன்மூலம் நிறுவனத்துக்கு வெளியே மிகப்பெரிய பங்குதாரர்களில் ஒருவராகியிருக்கிறார்.
நிறுவனம் தொடர்பாக பாரட்டவும் செய்துள்ளார். குறிப்பாக நிறுவனத்தினுடைய புதிய செயல்பாடுகள் குறித்து பாராட்டியுள்ளார்.
இந்த முதலீடு குறித்து தகவல் தெரிந்தவர்கள் பால்மரை அணுகியபோது பால்மர் உடனடியாக இதற்கு பதிலளிக்கவில்லை.
ட்விட்டர் நிறுவனத்துக்கு வெளியே உள்ள முதலீட்டாளர் களில் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளவர்களில் பால்மரும் ஒருவர். ரிஸ்வி டிராவர்ஸி மேனேஜ்மெண்ட் நிறுவனமும் அதிக முதலீடுகளை வைத்துள்ளது. மார்கன் ஸ்டேன்லி நிறுவனம் 4.54 சதவீத பங்குகளை வைத்துள்ளது. சவுதி அரேபியா வின் மன்னர் பின் தலாலுக்கு சொந்தமான கிங்டம்ஸ் ஹோல் டிங்ஸ் நிறுவனம் சமீபத்தில் 5 சதவீதத்துக்கும் அதிகமாக தனது முதலீடுகளை அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான ஜாக் டோர்சியை விட பால்மர் அதிக முதலீடுகளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டோர்சி 3.2 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
இதன் காரணமாக ட்விட்டர் பங்குகள் வெள்ளிக்கிழமை 5 சதவீதம் ஏற்றம் கண்டது. கடந்த ஆண்டில் ட்விட்டர் பங்குகள் 38 சதவீதத்துக்கும் மேல் சரிவைக் கண்டது குறிப்பிடத்தக்கது.