

மானியமில்லாத சமையஸ் கேஸ் விலை இந்த மாதத்தில் தொடர்ந்து 2-வது முறை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
விமான எரிபொருள் விலையும், சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கடந்த 1-ம் தேதி மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி இந்த மாதத்தில் மட்டும் 100 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி வெளிச்சந்தையில் மானியமில்லாத 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.644 லிருந்து ரூ.694 ஆக அதிகரித்துள்ளது. டிசம்பர் 1-ம் தேதி கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில் இன்று 2-வது முறையாக 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.594 என்ற விலையில் மாறாமல் இருந்தது. அதுமட்டுமல்லாமல் மே மாதத்திலிருந்து அரசு சார்பில் கேஸ் மானியம் பெறும் மக்களின் வங்கிக்கணக்கிலும் மானியத் தொகை வழங்கப்படவில்லை.
கடந்த மே மாதத்திலிருந்து சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் படுவீழ்ச்சி அடைந்தபோதிலும், அந்தநேரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை, கேஸ் விலையும் குறைக்கப்படவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூனில் டெல்லியில் மானியத்துடன் கேஸ் சிலிண்டர் விலை ரூ.497க்கு விற்பனையானது. அதன்பின் தற்போதுவரை ஒட்டுமொத்தமாக ரூ.147 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் இருமுறை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால், மானியத்தொகையை வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்கில் அரசு செலுத்த வேண்டியதிருக்கிறது.
5 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை 18 ரூபாயும், 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் ரூ.36.50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன