3-வது நாளாக பங்குச் சந்தை வீழ்ச்சி: வங்கிப் பங்குகள் விலை சரிவு

3-வது நாளாக பங்குச் சந்தை வீழ்ச்சி: வங்கிப் பங்குகள் விலை சரிவு
Updated on
1 min read

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 213 புள்ளிகள் குறைந்து 27039 புள்ளிகளுடன் முடிவடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இதுவே மிகப் பெரிய சரிவு. தேசியப் பங்குச் சந்தை நிப்டி குறியீட்டு எண் 61 புள்ளிகள் சரிந்து 8171 புள்ளிகளுடன் முடிவடைந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் முடிவடைவதையொட்டி முதலீட்டாளர்கள் இன்று எச்சரிக்கையாக இருந்துள்ளார் கள். அது தவிர அக்டோபர் வரிசைக்கான டெரிவேட்டிவ் செக்மண்ட் ஒப்பந்தம் நாளை முடிவடைய உள்ளதும் பங்குச் சந்தையை பாதித்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த மூன்று நாட்களாக சென்செக்ஸ் குறியீட்டு எண் 431 புள்ளிகள் சரிந்துள்ளன.

கடந்த இரு மாதத்தில் ஆக்ஸிஸ் வங்கி 7 சதவீத சரிவை கண்டுள்ளது. கடந்த நான்கு வார முடிவில் ஐசிஐசிஐ வங்கி 4.30 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் சீனா மற்றும் இந்தோனேசிய பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது. அதேசமயம் ஐரோப்பிய பங்குச் சந்தையில் பிற்பகலில் ஏற்றமான சூழல் காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 19 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 11 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின.

என்டிபிசி, லுபின், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பங்குகள் சரிவிலிருந்து தப்பவில்லை.

பங்குச் சந்தையில் மொத்தம் 1,486 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 1,165 பங்குகள் லாபம் ஈட்டின. 183 நிறுவனப் பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இன்றி முன்தின விலையில் வர்த்தகமாயின. பங்கு வர்த்தகம் ரூ. 2,701 கோடியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in