

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கும் என்று சர்வதேச ஆலோசனை நிறுவனமான இ அண்ட் ஒய் (யர்னர்ஸ்ட் அண்ட் யங்) தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் நடத்திய கணிப்பில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், தலைவர்கள் 32 சதவீதம் பேர் இந்தியாவைத் தேர்வு செய்துள்ளனர். சீனா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பிரேசில் ஆகியன அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதோடு முதலீடுகள் வருவதை உறுதி செய்வதாக உள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு வாரியத்துறை (டிஐபிபி) செயலர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கைக்கு ``ரெடி, செட், கோ’’ - என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முடிவுகள் எடுக்கும் நிலையில் உள்ள 500 நிறுவனத் தலைவர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. தொழில்துறை, ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருள் தயாரிப்பு, கட்டமைப்புத் துறை, தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இதில் இடம் பெற்றிருந்தனர்.
2014-ம் ஆண்டு இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவலுடன் இப்போது மேற் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளும் ஒப்பீடு செய்யப்பட்டன. பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மை 2014-ல் 70 சதவீதமாக இருந்தது தற்போது 76 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல அரசியல் ஸ்திரத்தன்மை 60 சதவீதத்திலிருந்து 68 சதவீத மாக உயர்ந்துள்ளது. தொழில் தொடங்குவதை எளிமையாக்கு வதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் 57 சதவீதத்தி லிருந்து 67 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரியவந் துள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற நிறுவன தலைவர்கள் ஐந்து பேரில் மூன்று பேர் இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய உள்ளனர். ஆய்வில் பங்கேற்ற தலைவர்களில் 55 சதவீதம் பேர் மேக் இன் இந்தியா திட்டத்தைப் பற்றி நன்கு அறிந்துள்ளனர். தங்களது உற்பத்தி ஆலைகளை விரிவாக்கம் செய்யும்பட்சத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ஆலை அமைக்க விரும்பம் தெரிவித்தவர்கள் அதிகம் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.